- Home
- /
- ஷாட்ஸ்

துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன் 2 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார். நாளை கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். நாளை மறுநாள் சொந்த ஊரான திருப்பூரில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார். இந்நிலையில், கோவைக்கு நாளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வர உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் இன்று முதல் 30ம் தேதி வரை 4 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பூரிலும் நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது. சென்னையில் நாளை வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது.

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக விதிகள் வகுக்க 10 நாள் அவகாசம் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டிஅளித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்தால் சுட்டிக்காட்டுவது நமது கடமை. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் என தெரிவித்தார்.

எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட சென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மொத்தமாக 331 கி.மீ நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 3.5 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள், கோரிக்கைகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அக்.27ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபம் அருகே அடுப்பு வைத்து பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது. மாற்று வழி என்ன என்பது குறித்து கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகளை முறையாக மீட்டு பராமரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் கூடுதல் ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுத்துறை துணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். பருவமழையால் மழையில் நெல் நனைந்துள்ளதால் ஈரப்பத அளவை 17%லிருந்து 22%ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து 3 குழுக்களை மத்திய அரசு அனுப்பியது.

பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில், நெல் கொள்முதல் குறித்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீரில் மூழ்கிய பயிர்களில் 33%, அதற்கு மேல் சேதம் ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல், மின்வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில் மழையால் பழுதடையும் சாலைகளை உடனுக்குடன் சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார பாக்ஸ்கள், கேபிள்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்றைய விலை நிலவரம் எப்படி இருக்குமோ என இல்லத்தரசிகள் திகிலுடன் காத்திருந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்தது. சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு பவுன் ரூ.93,600- க்கு விற்பனையானது . அதன் தொடர்ச்சியாக பிற்பகலில் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்தது. இந்த நிலையில், தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.92,000-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததன் எதிரொலியாக அதன் விலை சரிவை சந்தித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் மளமளவென குறைந்து வருகிறது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.174-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.









