ஷாட்ஸ்

திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி. இவருக்கு வயது 74. இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில், பொன்னுசாமி சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆவின் டெண்டர் முறைகேடு புகார்: வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!

 ஆவின் டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி ஞானசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆவின் பால் விநியோக வாகன டெண்டரில் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் உத்தரவாதத்தை பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவின் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தார். பெரம்பூரில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதியதில் சிறுமி ரித்திகா(16) உயிரிழந்தார்.ஓட்டேரியில் சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் புதுப்பேட்டை மெக்கானிக் இக்ரம் உசேன் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த இளம்பெண் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை - திருச்சி இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு: விமானம் ஓடுபாதையில் நிறுத்தம்!!

சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகளை திருச்சிக்கு அனுப்பி வைக்க விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது.

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: தேவசம்போர்டு முன்னாள் அதிகாரியிடம் விசாரணை!!

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலையில் இருந்து தங்கத்தகடுகளை எடுத்துச் செல்ல ஆவணங்களை கொடுத்தார் என்பது முராரி மீதான குற்றச்சாட்டு. துவார பாலகர் சிலையில் இருந்த தங்கம் திருட்டு தொடர்பான வழக்கில் 2வது எதிரியாக முராரி பாபு சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது!!

சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டார். மாதம் 60 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து சூதாட்டம் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீடு வாடகைக்கு எடுத்த கீழ்க்கரையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரை பாண்டி பஜார் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். சமூக வலைதளங்களில் வரும் புகார்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்கிறோம். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அங்கு வரும் புகார்கள் அடிப்படையில் ஆய்வு செய்தார். காவிரி படுகை மாவட்டங்களுக்கு அமைச்சர்களை முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.300 குறைந்து கிராமுக்கு ரூ.11,700க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்கப்படுகிறது.

கனமழை எச்சரிக்கை; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்கள்: கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம், திருச்சி. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

டில்லியில் பரபரப்பு..!! எம்.பி.,க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

டில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ்ய சபா எம்பிக்கள் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு இந்தக் கட்டடம் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டது. பார்லிமென்டிற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு, பார்லி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளில் ஒன்றாகும். குடியிருப்பு வளாகத்தின் மேல் தளங்களில் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டது, இதனால் அங்கு குடியிருப்பவர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இன்று கோவை, நீலகிரி உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.96,000க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.2,000 குறைந்த நிலையில் தற்போது ரூ.400 உயர்ந்து ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் தங்கம் கிராமுக்கு ரூ.250 குறைந்த நிலையில் மாலையில் ரூ.50 உயர்ந்துள்ளது; சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.190க்கு விற்பனையாகிறது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை பெய்யும் என்பதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல். இடுக்கியில் நேற்றிரவு முதல் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சம் அடைந்த மக்களை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

கனமழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே படுத்திருந்த மூதாட்டி உயிரிழப்பு!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் குறிச்சி பாண்டியாபுரம் பகுதியில் கனமழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே படுத்திருந்த மாடத்தி அம்மாள் (70) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!!

சென்னை மெட்ரோ பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் அக்.20 முதல் 24 தேதிகளில், காலை 5 மணி முதல் 6.30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதை ஒட்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 26% கூடுதலாக மழை பெய்துள்ளது!!

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 26% கூடுதலாக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 103.8 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 131.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மைய வளாகத்தில் 30 பேர் வீதம் 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மாவட்டங்களுக்கு விரைந்து செல்ல தயார் நிலையில் உள்ளனர். சென்னை, நெல்லை மாவட்டங்களில் ஏற்கெனவே ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது.

சென்னை- டெல்லி, மதுரை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 மணிநேரம் தாமதம்!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மதுரை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை, டெல்லி செல்லும் விமானங்கள் 2 மணிநேரம் தாமதத்துக்கு காரணம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவிக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஏர் இந்தியா விமானத்தில் மதுரை செல்லவிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தவிப்புக்குள்ளாகி உள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில் தரப்பட்ட உணவில் தலைமுடி: பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை

ஏர் இந்தியா விமானத்தில் தரப்பட்ட உணவில் தலைமுடி இருந்த வழக்கில் பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கொழும்பில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் சுந்தர பரிபூரணம் பயணித்தபோது உணவு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட உணவில் தலைமுடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பயணி சுந்தர பரிபூரணம் ஊழியரிடம் புகார் அளித்தார். உணவில் தலைமுடி இருந்தது தொடர்பாக சுந்தர பரிபூரணம் சென்னை கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பயணிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஏர் இந்தியா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நவம்பர் 7க்கு ஒத்திவைப்பு!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நவம்பர் 7க்கு ஒத்திவைத்தது. சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர், ரம்யா ஆஜராகாத நிலையில், வழக்கை நவம்பர் 7க்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.