காரை NH-ல் ஓட்டும்போது இந்த 5 விஷயங்களை கடைபிடிக்க மறக்கவேண்டாம் ...

Update: 2024-06-18 06:20 GMT

 NH

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

1)நாம் எல்லாரும் நினைப்பதுபோல் நெடுஞ்சாலைகளில் கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இதில் பல சவால்களும், ஆபத்துகளும் உள்ளன. சிறந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம்முடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய முடிவதோடு கூடுதல் சந்தோஷத்தோடு காரையும் ரசித்து ஓட்ட முடியும். நெடுஞ்சாலையில் கார் ஓட்டும்போது ஒவ்வொரு ஓட்டுனர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 5 பழக்கங்கள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

2)பாதுகாப்பான இடைவெளியில் பின்தொடருங்கள்: நெடுஞ்சாலையில் கார் ஓட்டும்போது நமக்கு முன் செல்லும் வாகனங்களுக்கு இடையே குறிப்பிட்ட தூரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதைப் பின்பற்றுவதன் மூலம் முன் செல்லும் வாகனம் திடீரென்று பிரேக் பிடித்தாலோ அல்லது வேகத்தை குறைத்தாலோ நம் காரின் வேகத்தை குறைக்க நமக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கும். மழை, பனி போன்ற மோசமான வானிலையின்போது இந்த இடைவெளியை இன்னும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவையற்ற விபத்து தவிர்க்கப்படும்.

3)வளைவுகளில் சிக்னல் செய்யுங்கள்: வளைவுகளில் முறையாக சிக்னல் பயன்படுத்துவது நெடுஞ்சாலை டிரைவிங்கில் முக்கியமான அம்சமாகும். நீங்கள் லேன் மாறப்போகிறீர்கள் அல்லது நெடுஞ்சாலையிலிருந்து வெளியே வரப் போகிறீர்கள் என்பதை இதன் மூலமே பிற வாகனம் தெரிந்துகொள்ளும். இதைச் செய்வதால் விபத்துகள் தவிர்க்கப்படும். சிக்னல் செய்யாமல் திடீரென லேன் மாறினால் நெடுஞ்சாலையில் மோசமான விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

4)வேகத்தின் அளவு: சாலையின் நிலை, போக்குவரத்து நெரிசல் மற்றும் பிற காரணிகளை பொறுத்து நம்முடைய காரின் வேகம் மாறுபடும். இவை அனைத்துமே பாதுகாப்பான டிரைவிங்கில் போதுமான தாக்கத்தை செலுத்துகின்றன. அதிவேகத்தில் செல்லும்போதே நிறைய விபத்துகள் நேர்கின்றன. ஆகையால் சாலையில் குறிப்பிடப்பட்டுள்ள வேகத்தில் மட்டுமே செல்லுங்கள்.

5)ஓவர்டேக்: முன் செல்லும் வாகனங்களை முந்திச்செல்ல விரும்பினால், முதலில் உங்கள் காரின் கண்ணாடியை பாருங்கள். ஓவர்டேக் செய்யலாம் என உறுதியாக தெரிந்தபிறகு முந்திச் செல்லுங்கள். அதற்கென்று சாலையில் அங்குமிங்கும் என மாறிமாறி ஓவர்டேக் செய்யாதீர்கள். ஓவர்டேக் செய்தபிறகு பழையபடி உங்கள் லேனுக்கு வந்துவிடுங்கள். இதை பின்பற்றுவது அனைவருக்குமே நல்லது. இதனால் தேவையற்ற விபத்து தவிர்க்கப்படும்.

இடையூறுகளை தவிர்க்கவும்: கார் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதோ அல்லது சாப்பிடுவதோ அல்லது இடையூறு தரும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடுவது கூடவே கூடாது. அதுவும் அதிவேகத்தில் காரை ஓட்டிக்கொண்டிருக்கும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மோசமான விபத்துகள் ஏற்பட்டு தேவையற்ற உயிரிழப்புகள் உண்டாகும். தயவுசெய்து கார் ஓட்டும்போது சாலையிலிருந்து உங்கள் கவனத்தை திசைதிருப்பும் எந்தவொரு செயல்களிலும் ஈடுபடாதீர்கள்.

Tags:    

Similar News