ஆக்டிவாவுக்குப் போட்டியா ! ஹோண்டா நிறுவனம் களமிறங்கும் ஸ்டைலோ.......
ஹோண்டா நிறுவனம் களமிறங்கும் ஸ்டைலோ ஆக்டிவா ப்ரீமியம் ரகத்தில் சேராது. அந்த இடம் ஹோண்டாவைப் பொருத்தவரை வெற்றிடம்தான். அதை நிரப்பத்தான் ஸ்டைலோ வந்திருக்கிறது. ஸ்டைலோ பற்றிப் பார்க்கலாம்.
இதை ரெட்ரோ மாடர்ன் ஸ்கூட்டராக ரெடி செய்திருக்கிறது ஹோண்டா. அதாவது வின்டேஜ் ஸ்டைல் ரெட்ரோ டிசைனுடன் மாடர்ன் வசதிகளையும் கலந்து கட்டி வந்திருக்கிறது ஸ்டைலோ. ஸ்கூட்டர் முழுக்க எல்இடி மயம்தான். இந்த ஸ்கூட்டரில் கீலெஸ் ஸ்டார்ட் இருக்கப் போகிறது.
அதாவது, சாவியைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, பட்டன் ஸ்டார்ட் மூலம் கிளம்பிப் போகலாம். இதில் வழக்கமான சிபிஎஸ் (Combi Braking System) மற்றும் ஏபிஎஸ் (Anti Lock Braking System) என 2 சாய்ஸ்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஸ்டைலிஷான அலாய் வீல்கள் ஸ்கூட்டரின் பாடி கலருக்கு ஏற்ப மேட்ச்சாகக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பச்சை நிற ஸ்கூட்டரில் அலாய் வீல் ரிம்களைச் சுற்றி ஒரு மாதிரியான பிரெளன் நிற கோல்டன் ஃபினிஷ் கொடுத்திருப்பது நச்! சீட் கவர், ஃப்ளோர் போர்டு என முக்கியமான அம்சங்கள் இந்த பிரெளன் நிறத்தில் இருந்தது அழகாக இருந்தது. இதுதான் ஏபிஎஸ் கொண்ட டாப் மாடல். சாதாரண மாடல் Glam Biege மற்றும் Royal Matte Black என கலர்களில், 12 இன்ச் ஸ்டைலிஷான அலாய் வீல்களில் ஸ்டைலா கிடைக்கப் போகுது ஸ்டைலோ.
சீட்டுக்கு அடியில் இதன் இன்ஜின் பற்றிப் பார்க்கலாம். இது லிக்விட் கூல்டு இன்ஜின் செட்அப். அதனால், செலவு லேசாகப் பழுக்கலாம். சிங்கிள் சிலிண்டர். இதன் பவர் 16bhp மற்றும் பவர் 15Nm பீக் டார்க். சிட்டிக்குள் மட்டுமில்லை; ஆளில்லாத சாலைகளிலும் ஓட்டுவதற்கு ஜம்மென்று இருக்கலாம் இந்த ஸ்டைலோ.
இதில் தாராளமான ஆப்ரான் வசதி இருக்கிறது. டிஸ்க் பிரேக்ஸ் இருக்கின்றன. வழக்கம்போல் இந்தப் பெரிய ஸ்கூட்டரில் டெலிஸ்கோப்பிக் முன் பக்க ஃபோர்க் செட்அப்தான் கொடுத்திருக்கிறார்கள். முன் பக்க ஃபோர்க்குக்கு, பின் பக்க கிராப் ரெயிலுக்கு சில்வர் ஆக்ஸென்ட் வேலைப்பாடுகள் கொடுத்திருப்பதும் ஸ்டைலாகத்தான் இருக்கிறது.
இதன் மைலேஜ் 45 கிமீ என்று விளம்பரம் செய்து வருகிறது ஹோண்டா. இவ்வளவு விஷயங்கள்தான் ஸ்டைலோ பற்றித் தெரிந்திருக்கின்றன. ஹோண்டா, இன்னும் இதை முறைப்படியான லாஞ்ச் செய்யவில்லை. திட்டாதீங்க; இப்போதைக்கு இதை இந்தோனேஷியா மார்க்கெட்டுக்குக் களமிறக்கியிருக்கிறது. ஆனால், நிச்சயம் இது இந்தியாவுக்கு வரும்.
இதன் விலை பற்றிய தகவல்களும் தெரியவில்லை.