நியூ என்ட்ரி... 50 வருடங்களுக்கு பிறகு!

Update: 2024-08-16 06:55 GMT

 பி.எஸ்.ஏ மோட்டார்சைக்கிள்ஸ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்திய சுதந்திர தினத்தில் (Indian Independence Day) பி.எஸ்.ஏ மோட்டார்சைக்கிள்ஸ் (BSA Motorcycles) நிறுவனம் இந்தியாவில் மீண்டும் அதன் பைக்குகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இதன்படி, இந்த நிறுவனத்தில் இருந்து நீண்ட காலத்திற்கு பின் புதிய பைக் இன்று (ஆகஸ்ட் 15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் ஒரு பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், இதன் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் என்ன மாதிரியான பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? அதன் விலை என்ன? என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

உலகின் பழமையான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றாக, சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட பைக் நிறுவனங்களுள் ஒன்று, பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் ஆகும். 19ஆம் நூற்றாண்டில் கையெறி துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக செயல்பட்டுவந்த பிஎஸ்ஏ, அதன்பின் 1903ஆம் ஆண்டில் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக உருவெடுத்தது.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் தோன்றிய இந்த நிறுவனத்தின் பெயரின் முழு விரிவாக்கம் பர்மிங்காம் ஸ்மால் ஆர்ம்ஸ் (Birmingham Small Arms - BSA) ஆகும். 1910ஆம் ஆண்டில் முதல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த பிஎஸ்ஏ நிறுவனம் சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே இந்தியாவிலும் அதன் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துவந்தது. ஆனால், 1973ஆம் ஆண்டில் சில காரணங்களினால் இங்கிலாந்தில் பைக் விற்பனையை பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுத்தியது. அதனை தொடர்ந்து, இந்தியாவிலும் பிஎஸ்ஏ பைக்குகள் விற்பனை செய்யப்படுவது நிறுத்திக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், சுமார் 50 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் முதல் பிஎஸ்ஏ பைக் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 78வது சுதந்திர தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது, பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 (BSA Gold Star 650) மோட்டார்சைக்கிள் ஆகும்.

புதிய கோல்டு ஸ்டார் 650 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,99,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்சைனியா சிவப்பு, ஹைலேண்ட் க்ரீன், மிட்நைட் கருப்பு, டவுன் சில்வர் மற்றும் ஷேடோவ் பிளாக் என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த புதிய பிஎஸ்ஏ பைக்கை வாங்கலாம். ரூ.2,99,990-இல் இன்சைனியா சிவப்பு அல்லது ஹைலேண்ட் க்ரீன் நிறங்களில் பைக் கிடைக்கும். மிட்நைட் பிளாக், டவுன் சில்வர் பெயிண்ட் ஆப்ஷன்களில் ரூ.3,11,990 மற்றும் ஷேடோவ் பிளாக் பெயிண்ட்டில் ரூ.3,15,990 எக்ஸ்-ஷோரூம் விலைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை இல்லாமல், லீகசி எடிசனிலும் இந்த பைக் கிடைக்கவுள்ளது. லீகசி எடிசனில் ஷீன் சில்வர் நிறத்தில் பைக் கிடைக்கும். கோல்டு ஸ்டார் 650 லீகசி எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3,34,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 652சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம் வேகத்தில் 45 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம் வேகத்தில் 55 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. டாப்-ஸ்பீடு மணிக்கு 160கிமீ ஆகும். பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 ஆனது பழமையான கிளாசிக் தோற்றத்திலான ஓர் மாடர்ன் பைக் ஆகும்.

2021ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதே கோல்டு ஸ்டார் 650 பைக்கை இந்தியாவில் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மாடர்ன் பைக்காக கருதப்பட்டாலும், பழமையான கிராடில் ஃப்ரேமில் கோல்டு ஸ்டார் 650 உருவாக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சாப்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. பழமையான பைக் தோற்றத்திற்காக, அலாய் சக்கரங்களுக்கு பதிலாக வயர் ஸ்போக் சக்கரங்கள் உள்ளன. இந்த சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த சக்கரங்களில் ட்யூப்-டைப் டயர்கள் உள்ளன; ட்யூப்லெஸ் கிடையாது. பைக் பார்ப்பதற்கு பழமையான பைக் போன்று இருந்தாலும், நிறைய மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜர் உள்ளிட்டவற்றை சொல்லலாம். 1960களில் விற்பனையில் இருந்த பைக்குகளை போன்று பைக்கின் பெட்ரோல் டேங்க் நன்கு பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹெட்லைட் ஆனது வட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கை சுற்றிலும் பளபளப்பான க்ரோம் ஜொலிக்கின்றன.

Tags:    

Similar News