வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்களை பெற்ற ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் - முழுமையான விசராணைக்கு உத்தரவு !!
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரத்தின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சேவை தரம் மிக மோசமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர்கள் முன் வைத்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து ஓலா நிறுவனம் சுமார் 80,000 புகார்களைப் பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமும் ஓலா நிறுவனத்திடம் கடந்த அக்டோபர் மாதம் வாடிக்கையாளர்களிடமிருந்து 10,000-க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றிருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த ஓலா நிறுவனம், வாடிக்கையாளர்களின் புகார்களில் 99.1% புகார்கள் சரிசெய்யப்பட்டு விட்டதாக பதிலளித்தது. மேலும், பெரும்பாலான புகார்கள் மிகவும் சிறிய பிரச்சினைகளுக்காகவே பதிவு செய்யப்பட்டதாகவும், அவை உடனடியாகத் சரிசெய்து விட்டதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்தது. ஓலா ஸ்கூட்டர்களின் தரம், ஓலா வழங்கி வரும் சேவை என அனைத்து வகையிலும் BIS அமைப்பு தீர விசாரணை செய்யும் என மத்திய நுகர்வோர் துறை செயலாளர் நிதி கரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது S1X, S1 ஏர் மற்றும் S1 ப்ரோ என மூன்று வேரியன்ட்களாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக ஒவ்வொரு மாதமும் 80,000 புகார்கள் பெறப்படுவதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. இந்த பிரச்சினை பேசப்பட்டு வந்த போது மோசமான சர்வீஸ் காரணமாக ஓலா ஷோரூம் ஒன்றிற்கு வாடிக்கையாளர் ஒருவர் தீ வைத்து கொளுத்திய சம்பவமும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய நுகர்வோர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வாடிக்கையாளர்கள் புகார்கள் காரணமாக விளக்கம் கேட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது முழுமையான விசராணைக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ரோட்ஸ்டர் X, ரோட்ஸ்டர் மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ ஆகிய மூன்று எலெக்ட்ரிக் பைக்குகளையும் ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.