புத்துணர்ச்சி ஊட்டும் புதினா - ஏகப்பட்ட நன்மைகள் !!
புதினா இலைகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, சி, டி, ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நாம் பெரும்பாலும் சமைக்கும் உணவுகளில் மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் பொருள்களில் புதினா இலைகளும் ஒன்று. இதில் எக்கச்சக்க மருத்துவகுணங்கள் இருக்கிறது.
மோசமான உணவுமுறையால் வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதற்கு புதினா இலை சிறந்த தீர்வாக அமைகிறது. புதினா இலைகள் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டவையாகும். இதனை உட்கொள்வதன் மூலம் வயிற்றில் ஏற்படும் எந்த வீக்கத்தைக் குறைக்க முடியும். மேலும் இந்த இலைகள் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது.
நீரிழிவு சிகிச்சையில் புதினா அல்லது புதினா இலைகளைப் பயன்படுத்துவதில் சாத்தியமான நன்மைகள் உள்ளன. புதினா இலைகளில் காணப்படும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
புதினாவில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும், பற்களில் பிளேக் படிவுகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. மேலும், இது பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தை நீக்கி, வாய் மற்றும் பற்களை இயற்கையாகவே ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பருவநிலை மாற்றத்தால் பலரும் பல்வேறு நோய்களைச் சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்குச் சிறந்த தீர்வாக புதினா இலைகளை உட்கொள்ளலாம். இந்த புதினா இலைகள் சளி மற்றும் ஜலதோஷத்தைக் குணப்படுத்த உதவும் சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும் புதினாவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருமலால் ஏற்படும் எரிச்சலைப் போக்க உதவுகிறது.
புதினா இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், முகப்பருவை நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் இவை சருமத்தை அமைதிப்படுத்தவும்,மென்மையாக்கவும் உதவுகின்றன.இவை முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவையாகும்.