100 பதக்கங்களை நோக்கி இந்தியா: ஆசிய விளையாட்டில் அபாரம்:
19வது ஆசிய விளையாட்டில் 95 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, இன்னும் 9 போட்டிகளில் பதக்கத்தை உறுதி செய்துள்ளதால், 100 பதக்கத்தை முதன்முறையாக வென்று சாதனை படைக்க உள்ளது.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சு நகரில் தற்போது நடந்து வருகிறது.
இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதுவரை இந்தியா தரப்பில் 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில் முதன்முறையாக 100 பதக்கங்களை வெல்லும் அரிய சாதனையை இந்தியா நிகழ்த்த உள்ளது.
கடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 70 பதக்கங்களை வென்றதே அதிகமாக இருந்தது.
ஆனால், இந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 95 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தாலும், ஆண்கள் கிரிக்கெட், கபடி, உள்ளிட்ட 9 போட்டிகளில் இந்தியா பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதனால் முதன்முறையாக 100 பதக்கங்களை தாண்டி சாதிக்க உள்ளது.