''அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம்'' - காங்கிரஸ் எம்.பி-க்கள் முழக்கம்!

Update: 2024-06-24 08:37 GMT

காங்கிரஸ் எம்.பி-க்கள் முழக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இடைக்கால சபாநாயகர் தேர்வு விஷயத்தில் நரேந்திர மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சாசன புத்தகத்தை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்றும் அரசியல் சாசனம் வாழ்க என்றும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்ள் சுதிப் பந்தோபாத்யாய, சவுகதா ராய், கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட ஏராளமான எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “அரசியல் சாசனத்தை சிதைக்க பிரதமர் மோடி முயல்கிறார். அதனால்தான் இன்று அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். இங்கே காந்தி சிலை இருக்கிறது. அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டும் என்பதை மோடிக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்தினோம்” எனத் தெரிவித்தார்.

இதேபோல், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்துக்கு எதிராக மோடியும், அமித் ஷாவும் தாக்குதல் நடத்துவதை எங்களால் ஏற்க முடியாது. அது நிகழ நாங்கள் விட மாட்டோம். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும்போது கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை கைகளில் ஏந்தியபடிதான் பதவியேற்போம். எந்த ஒரு சக்தியும் இந்திய அரசியல் சாசனத்தை தொட முடியாது என்ற எங்களின் செய்தி நாடு முழுவதும் சென்றடைந்து கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.

Tags:    

Similar News