மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் - காங்கிரஸ் கடும் கண்டனம் !
மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரியில் நேற்று நடந்த ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், 'தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தின் விளைவால் ரயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த யதார்த்தத்துக்கு இன்றைய (நேற்று) விபத்து மற்றொரு உதாரணம்' என குறிப்பிட்டு உள்ளார். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக இந்த அப்பட்டமான அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் எனக்கூறியுள்ள ராகுல் காந்தி, இந்த விபத்துகளுக்கு மோடி அரசை பொறுப்பேற்கச் செய்வோம் என்றும் உறுதிபட உறுதிபட தெரிவித்து உள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம்.
இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.