மகா கும்பமேளாவில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்க திட்டம்: யோகி ஆதித்யநாத்
மகா கும்பமேளாவில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த 13-ந் தேதி முதல் மகா கும்பமேளா நடந்து வருகிறது. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்களால் பிரயாக்ராஜ் நகரமே திக்குமுக்காடி வருகிறது. மவுனி அமாவாசையை முன்னிட்டு கும்பமேளா வளாகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்கள் இங்கே புனித நீராடிய பின் நெகிழ்ச்சியடைந்து செல்வதை நாள்தோறும் பார்க்க முடிகிறது. ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜைப் புகழ்ந்து பாடுவது உண்மையிலேயே பிரமிக்க வைத்தது. அவர்களுக்கு இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தெரியாது. ஆனாலும் அவர்கள் இந்த மொழிகளில் மந்திரங்கள் மற்றும் சனாதன தர்மத்துடன் தொடர்புடைய வசனங்களை மிகுந்த பக்தியுடன் உச்சரிக்கின்றனர். பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக திட்டமிட்டு உள்ளனர். மகர சங்கராந்தி மற்றும் பவுஷ் பவுர்மணி தினத்தில் என்னால் புனித நீராட முடியவில்லை. சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு என்னால் சிரமம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக நானாகவே பங்கேற்கவில்லை என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.