எஸ்.ஆர்.வி இன்னோவேடிவ் பள்ளி விளையாட்டு விழா
விளையாட்டில் தோல்வியை கண்டு பின்வாங்காமல் வெற்றி பெறும் வரை முயற்சி செய்து கொண்டே இருந்தால் சாதனையாளராகலாம் என நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்கண்காணிப்பாளர் வி.ராஜூ குறிப்பிட்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. இன்னோவேடிவ் சி.பி. எஸ்.இ பள்ளியின் விளையாட்டு தினவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைவர் ஏ.ராமசாமி தலைமை வகித்தார். பொருளாளர் பி.சுவாமிநாதன் வரவேற்றார். ராசிபுரம் டிஎஸ்பி., டி.கே.கே.செந்தில்குமார், பள்ளி நிர்வாகிகள் எம்.குமரவேல், ஏ.ஆர்.துரைசாமி, எஸ்.செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் டி.ஆர்த்தி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.ராஜூ, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்துப் பேசினார். இதில் மேலும் அவர் பேசியது: விளையாட்டு என்பது இலக்கிய காலம் முதல் இருந்து வருகிறது. ஒருவர் தனிப்பட்ட முறையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டுமெனில் கல்வி, வீரம், கொடை போன்றவற்றில் தனித்துவம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வி என்பது பயின்று முன்னேறி சிறப்பு பெறுவது என்பது தான் கல்வி. வீரம் என்பது விளையாட்டு சார்ந்தது. இதில் பயிற்சி பெறுவதன் மூலம் ஆரோக்கியம், நல்ல சிந்தனை உருவாகும். குழுவாக இணைந்து விளையாடுவதன் மூலம் ஆற்றல் பெருகும். விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தோல்வியடைந்தவர்கள் வருத்தப்படக்கூடாது. தோற்றாலும் மீண்டும் முயன்றால் வெற்றி பெறலாம் என்ற எண்ணம் வேண்டும். ஒவ்வொருக்கும் ஒரு தனித்திறன் உள்ளது. இதனை வெளிப்படுத்துவதற்கு தடையாக இருப்பது பயம், தயக்கம் தான். இதனை தவிர்த்தால் நீங்கள் வெற்றியாளராகலாம். விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் தலைமை பண்பினை வளர்த்துக்கொள்ளலாம் என்றார்.முடிவில் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பை வழங்கிப் பாராட்டினர். விழாவில் எஸ்.ஆர்.வி., மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.செந்தில், எஸ்.ஆர்.வி ஹைடெக் பள்ளி தலைமையாசிரியர் ப.வள்ளியம்மாள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.