ஆறுகள், ஏரிகளில் கொட்டப்படும் குப்பைகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலிழந்து கிடப்பதால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

Update: 2023-12-26 06:12 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சிகள், தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, இயற்கை உயரம் தயாரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2016}ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இந்த சட்டத்தின்படி உணவகங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் மற்றும் குடியிருப்புகளில் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் சாலையில் குப்பை கொட்டுபவர்கள், குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தூய்மை காவலர்கள் கண்காணித்து, அபராதம் விதிப்பார்கள்.

தினசரி சேரும் குப்பைகளில், மக்கும் குப்பைகளை பச்சை நிறக்கூடையிலும், மக்காத குப்பைகளை நீல நிறக் கூடையிலும் உள்ளாட்சி பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்படுவதில்லை. மாறாக, சேகரிக்கப்படும் குப்பைகளை அருகில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள், ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட இடங்களில் மொத்தமாக கொட்டுகின்றனர். பிறகு, குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்துகின்றனர்.

இதனால், நாள்தோறும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், மூச்சு திணறல் மற்றும் தொற்று நோய்கள் பரவும் சூழல் உள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். ஆறுகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்த நிறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News