புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், 2 சூதுபவள மணிகளும், அக்கேட் வகை மணி ஒன்றும் கிடைத்துள்ளது. முழுமை பெறாத வடிவத்தில் உள்ள இந்த மணிகள் கிடைத்துள்ள நிலையில், பொற்பனைக்கோட்டை பகுதிக்குள் மணிகள் தயாரிப்புக் கூடம் இருந்திருக்கலாம் என அகழாய்வுத் தள இயக்குநர் த. தங்கதுரை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்தாண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில், கழிவுநீர் வாய்க்கால் போன்ற செங்கல் தளம், வட்ட வடிவ செங்கல் கட்டுமானம் போன்றவை கண்டறியப்பட்டன. மேலும், தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட தொல்பொருள்களும் கிடைத்தன.இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.