வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது
டிராக்டர்கள் மற்றும் இதர வேளாண் இயந்திரங்களை முறையாகப் பராமரித்தால் தான் அவற்றின் பணித்திறன் மேம்பட்டு, நீண்ட கால பயன்பாட்டிற்கு உழவு பணிகளில் ஈடுபடுத்த இயலும். டிராக்டர்களை பராமரிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இதே போன்று, நெல் அறுவடை இயந்திரங்கள், கரும்பு அறுவடை இயந்திரங்கள் பவர் டில்லர்கள் போன்ற வேளாண் இயந்திரங்களும், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர் மற்றும் இதர உழவுக் கருவிகளும் விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல் மற்றும் பராமரிக்கும் வழிமுறைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும். இம்முகாமில்,வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறைகளை விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும்.வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல், செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாதது, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ளலாம். டிராக்டர்களுடன் உபகரணங்களைப் பொருத்தி இயக்கிடும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படும்.டிராக்டர்களை மற்றும் உபகரணங்களை விவசாயிகள் கையாண்டு இயக்கிட வழிவகை செய்யப்படும். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் திறன்மிகு இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இம்முகாம்களில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள இளைஞர்களை இத்துறையால் நடத்தப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெற ஊக்குவிக்கப்படும். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிக்கும் முகாமிற்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன கேட்டுக்கொண்டுள்ளார்.