நகராட்சி அலுவலகத்தில் சாதாரண அவசர நகரமன்ற கூட்டம் வடிகால் தூய்மை, குப்பை சுத்தம் செய்தால்தான் வார்டுக்குள் போக முடியும் என கவுன்சிலர்கள் ஆதங்கம்
குமாரபாளையம் நகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டத்தில், குப்பைகளும் சாக்கடை கால்வாய்களும் தூர் வாறும் பணிகள் முடிந்தால்தான் வார்டுக்குள் போக முடி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியின் நகரமன்ற அவசர மற்றும் சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். குமாரபாளையம் நகராட்சி பகுதிக்கு வாரச்சந்தை திடல் கட்டுவதற்காகவும் மற்றும் குமாரபாளையம் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்காகவும் தமிழக முதல்வர், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிக நிதி பெற்ற நகராட்சி குமாரபாளையம் நகராட்சி என நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கூறினார். இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு: தர்மராஜன் (தி.மு.க.): நானும் பல கூட்டங்களில் கேட்டு விட்டேன். எங்கள் வார்டில் குப்பைகள் அள்ளுவது இல்லை. வடிகால் தூய்மை படுத்துவது இல்லை. கேட்டால் ஆட்கள் இல்லை என்கிறார்கள். இதையெல்லாம் சரி செய்யாவிட்டால் வார்டுக்குள் போக முடியாது. நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. மக்கள் நடமாட அச்சம் கொண்டுள்ளனர். ஐயப்பன் கோவில் பகுதியில் சாலை அமைக்க வேண்டும். வேல்முருகன் (சுயேச்சை): எந்த இடத்தில் குப்பை கொட்டக்கூடாது என சொல்கிறோமோ அதே இடத்தில் தான் மக்கள் மீண்டும் குப்பை கொட்டி வருகிறார்கள். எங்கள் வார்டில் குப்பை எடுக்க 26 நாட்கள் யாரும் வராததால், வராத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கல் வீதம், 26 கற்கள் எடுத்து வைத்து பெண்கள் கணக்கிட்டு வைத்துள்ளனர். போன் போட்டால் சுகாதரத்துறையினர் எடுப்பது கூட கிடையாது. ராமமூர்த்தி (சுகாதார அலுவலர் கமிஷனர் கூட நகராட்சி பகுதியில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் இதே போல் செய்வதால், இது போன்ற இடங்களில் போர்டு வைக்க கூறியுள்ளார். புருஷோத்தமன் (அ.தி.மு.க.): எனது வார்டில் கோம்பு பள்ளம் தூர் வார பொக்லின் வேண்டும் என ஒரு வருடமாக கேட்டு வருகிறேன். ஆனால் பொக்லின் தரவில்லை. ஆனால் 21வது வார்டு பகுதியில் நகராட்சி சார்பில் பொக்லின் அனுப்பி வைக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. ஏன் இந்த பாரபட்சம்? நகராட்சி தொழிலாளர்கள் கோம்பு பள்ளத்தில் இறங்கி தூய்மை பணி செய்யும் போது, ஒருவரின் கால் மீது பாம்பு ஏறி சென்றது. அது அப்படி போனதால் பரவாயில்லை. கடித்து இருந்தால், என்ன ஆவது? அதனால், நானே எனது சொந்த செலவில், பொக்லின் வாடகைக்கு எடுத்து வந்து, எனது வார்டு பகுதியில் தூய்மை பணிகளை செய்து கொண்டேன். அண்ணா திருமண மண்டபம் இடித்து புதியதாக கட்டவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை என கூறினார்கள். ஆகவே, இந்த பணிகள் செய்யும் போது அதையும் சேர்த்து செய்து தர வேண்டுகிறேன். ராஜ் ( தி.மு.க.) நகராட்சி பூங்கா பழையபடி பராமரிப்பது இல்லை. புதர்களாக உள்ளது. வேறு நபரை நியமித்து பராமரிக்க செய்ய வேண்டும் விஜய்கண்ணன் ( நகராட்சி தலைவர்) கவுன்சிலர்கள் போன் செய்தால் எடுக்காமல் இருந்தால் என்ன அர்த்தம்? கவுன்சிலர்கள் எல்லோரும் சொல்லும் ஒரே புகார் குப்பை பிரச்சனை தான். நீங்கள் என் வார்டில் கூட குப்பை எடுப்பது இல்லை. பிறகு எப்படி மற்ற கவுன்சிலர்கள் வார்டில் குப்பை எடுப்பீர்கள்? அண்ணா திருமண மண்டபம் புதியதாக கட்டும் போது, அருகில் உள்ள நகராட்சி பள்ளிக்கும் முதல் தளத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் கோம்பு பள்ளம் முழுவதுமாக தூய்மை பணி மேற்கொள்ள நிதி உதவி செய்து தர தமிழக முதல்வர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு ஆகியோர் உறுதி கூறியுள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்யாசத்தில் நமது வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாடுபட்ட அனைத்து கவுன்சிலர்களுக்கும் நன்றி. குமரன் ( நகராட்சி கமிஷனர் ): அனைத்து வார்டுகளில் குப்பைகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதங்கள் நடந்தன. இந்த கூட்டத்தில் சாதாரண கூட்ட தீர்மானம் 37, அவசர கூட்ட தீர்மானம் ஒன்று, ஆக, 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறியாளர் ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.