காவிரி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முன்னாள், இந்நாள் அமைச்சர்கள்

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்புகளை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார்

Update: 2024-08-02 13:28 GMT
. மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் காவிரியில் முழுவதுமாக திறந்து விடப்படுவதால், குமாரபாளையம் இந்திரா நகர், மணிமேகலை தெரு, உள்ளிட்ட காவேரி கரையில் வசிப்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை குமாரபாளையம் ஜே. கே. கே. நடராஜா நகராட்சி திருமண மண்டபம், ராஜேஸ்வரி திருமண மண்டபம், மற்றும் ஐயப்ப சேவா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகள், நகராட்சி மற்றும் வருவாய் துறை மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை வெள்ள தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியாமரியம் மற்றும் மாவட்ட கலெக்டர் உமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் , குமாரபாளையம், பள்ளிபாளையம், கபிலர்மலை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, 413 குடும்பங்களைச் சார்ந்த ஆயிரத்து 46 நபர்கள் பாதுகாப்பாக பதினோரு முகாம்களின் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. காவிரி கரையில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக நகரின் அருகாமையில் இடம் தேடப்பட்டு வருகிறது. அவ்வாறு இடம் கிடைக்கப்படவில்லை எனில் அருகாமையில் லிப்ட் வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இவருடன் தாசில்தார் சிவகுமார், நகராட்சி தலைவரும், வடக்கு நகர பொறுப்பாளருமான விஜய் கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், நகராட்சி கமிஷனர் குமரன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள், மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, மல்லிகா, உஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இவருடன் நகர செயாளர் பாலசுப்ரமணி, துணை செயலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் வந்தனர்.

Similar News