மேட்டு மகாதானபுரத்தில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேட்டு மகாதானபுரத்தில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

Update: 2024-08-04 09:00 GMT
மேட்டு மகாதானபுரத்தில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு, ஆடிப்பெருக்குக்கு மறுநாளான ஆடி 19-ல் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இன்றும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதற்காக நேர்ந்துக்கொண்ட பக்தர்கள் ஆடி 1-ம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மேட்டுமகாதானபுரத்திற்கு வந்தனர். காவிரியில் இருந்து நேற்று ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் இன்று காவிரி ஆற்றில் குளித்து விட்டு வந்து கோயில் முன் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து அமர்ந்திருந்தனர். பலர் சாமிக்கு முடி இறக்கி மொட்டை தலையுடன் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பரம்பரை பூசாரி பெரியசாமி ஆணிகள் பதிக்கப்பட்ட காலணி அணிந்து, அம்பு போட்ட பிறகு அருள் வந்து, வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். தங்கள் தலையில் உடைத்த தேங்காய்களை பக்தர்கள் மற்றும் விழாவில் பங்கேற்றவர்கள் சேகரித்து எடுத்து சென்றனர். ஒரு சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கோவில் குளிப்பாட்டுக்காரர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் கோவிலுக்கு இயக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News