மேய்ச்சலுக்கு சென்ற மாடு மின்சாரம் பாய்ந்து பலி
குமாரபாளையத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு மின்சாரம் பாய்ந்து பலியானது
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெராந்தர் காடு பகுதியில் வசிப்பவர் மாதப்பன், 60. இவர் இன்று காலை 08:00 மணியளவில் மேய்ச்சலுக்காக தனது பசுவுடன் சரஸ்வதி தியேட்டர் சாலையில் உள்ள காலி இடத்திற்கு சென்றுள்ளார். மேய்ச்சல் முடிந்த பிறகு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது பசுமாடு உரசியதில் மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் மாட்டினை பிடித்து வந்த மாதப்பன் மீதம் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரியத்தினர், மின் இணைப்பினை துண்டித்தனர். மேலும் இந்த மின் விபத்து எவ்வாறு ஏற்பட்டது? என்பது குறித்து மின்மாற்றியை சோதனை செய்த பிறகுதான் தெரியும் எனவும் தெரிவித்தனர். மேலும் பசுமாடு உயிரிழந்ததைக் கண்டு அதன் உரிமையாளர் மாதப்பனும், அவரது மனைவியும் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு உரிய நஷ்டஈடு மாட்டின் உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.