புதுக்கோட்டையில் பகிர்வு தானி சேவை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-07 03:51 GMT
புதுக்கோட்டையில் உள்ளூர் மற்றும் நகரப்போக்குவரத்தை எளிமையாக்க ‘பகிர்வு தானி' (ஷேர் ஆட்டோ) இயக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் சுமார் 1.20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தற்போது சுற்றுப்பகுதிகளிலுள்ள நத்தம்பண்ணை, திருக்கட்டளை, தீருமலைராயசமுத்திரம், முள்ளூர், தேக்காட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைத்து,மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மாநகராட்சி எல்லைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்நிலையில், புதுக்கோட்டை மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான 'பகிர்வு தானி' சேவைக்கு அரசு அனுமதித்து, செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: நகரில் வாகனப் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், உள்ளூர்- நகரப் போக்குவரத்து நாளுக்கு நாள்நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.குறிப்பாக பள்ளி, கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பேருந்துகள் மாணவர்கள் மற்றும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அதேநேரத்தில், நகரின் முக்கிய இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால், ஆட்டோ பிடித்துச் செல்வதற்கான கட்டணமும் தாறுமாறாக வசூலிக்கப்படுகிறது.குறிப்பாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டுமானால் ரூ.100மும், 2. கி.மீ. தொலைவிலுள்ள ரயில்நிலையத்துக்குச் செல்ல வேண்டுமானால் ரூ. 150மும், 5 கி.மீ. தொலைவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமானால் ரூ. 250மும் ஆட்டோ கட்டணமாக செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்காக 'பகிர்வு தானி' சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத்தின் ஒவ்வொரு பொதுக்குழுக் கூட்டத்தின்போதும் தீர்மானம் தவறாமல் இடம்பெற்று வருகிறது. ஆனாலும், இதுதொடர்பான எந்த நடவடிக்கையும் சுமார் 25 ஆண்டுகளாக அரசால் எடுக்கப்படவில்லை.

Similar News