திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா

Update: 2024-09-24 05:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் நிறுவனர் அரங்கில் நடைபெற்றது. கல்லூரி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.எஸ்.சச்சின் அவர்களின் தலைமையில் பட்டமளிப்பு விழா இனிதே துவங்கியது. கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் வெ. மோகன், முதன்மைத் திட்ட அலுவலர் முனைவர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர்கள் முனைவர் வே.பத்மநாபன் மற்றும் முனைவர் மா.கார்த்திகேயன் ஆகியோர் பட்டமளிப்பிற்கான ஆண்டறிக்கையை வாசித்தனர். இந்த விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நாம் வாழ்வில் மூன்று முக்கிய செயல்களைப் பின்பற்றினால் வெற்றி பெறலாம் என்று கூறினார். அவை 'அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் நாள்முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடியும், தினமும் பிராணாயாமம் செய்வதன் மூலம் நமது வாழ்நாளை அதிகரிக்க முடியும். மன அமைதிக்காக தியானம் செய்வது' போன்ற கருத்துகளை வலியுறுத்தினார். மேலும் மாணவ, மாணவிகள் நாட்டின் வருங்கால மலரும் சமுதாயத்தின் தூண்கள் ஆகவே அவர்கள் சமூகத்தில் எதிர்வரும் பிரச்சனைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அடுத்ததாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ராஜ்குமார் மிட்டல் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தினார். மாணவ-மாணவிகள் தங்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு உடல், மனம், அறிவு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து வாழ்க்கையின் குறிக்கோள்கள் மற்றும் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரத்துவம் மற்றும் உதவிமனப்பான்மையுடன் செயல்பட வேண்டும், நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பேணிப் பாதுகாப்பதோடு சுற்றுச்சூழலையும் பேணிக் காத்திட வேண்டும் என்றும் கருத்துக்களைக் கூறி சிறப்புரையாற்றினார். விழாவில் தன்னாட்சிக் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 2 பேருக்கும். தன்னாட்சிக் கல்லூரியில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த 29 மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் முதுநிலை அறிவியல் மற்றும் கலை பிரிவைச் சேர்ந்த 171 மாணவ, மாணவிகளுக்கும், இளநிலை அறிவியல் மற்றும் கலை பிரிவைச் சேர்ந்த 1008 மாணவ, மாணவிகளுக்கும். கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பெரியார் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் வென்ற 2 மாணவிகளுக்கும், பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த 13 மாணவிகளுக்கும். கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற 10 மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இளநிலை மற்றும் முதுநிலை துறையைச் சார்ந்த 410 மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பட்டமளிப்பு விழா உறுதிமொழியேற்றனர்.

Similar News