ஆவணி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு
திருவண்ணாமலைக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள ஆவணி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், ஆத்தூர், பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம், தர்மபுரி மற்றும் ஓசூர் பஸ் நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.