சேலம் புதுரோடு அடுத்துள்ள பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி ஜனனி (வயது 21). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மாணிக்கம் தனது மனைவி ஜனனியை அவரது பெற்றோர் வீட்டுக்கு போகக்கூடாது என கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதில் மனமுடைந்த ஜனனி நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் ஆகி 3 ஆண்டுகள் என்பதால் சேலம் மேற்கு சரக உதவி கமிஷனர் நிலவழகனும் விசாரணை நடத்தி வருகிறார்.