வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
நீர்வீழ்ச்சியில் உற்ச்சாக குளியல்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி நேற்று ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களுக்கு சென்று அழகை கண்டு ரசித்தனர். ஏற்காட்டிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்தும், தங்களது செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். கிளியூர் நீர்வீழ்ச்சி இதேபோல், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று ரசித்தனர். குறிப்பாக ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து உற்சாகம் அடைந்ததை காணமுடிந்தது.வாரவிடுமுறையால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.