கோவிலுக்கு குதிரையை தானம் வழங்கிய விவசாயி
குமாரபாளையம் அருகே விவசாயி தான் ஆசையுடன் வளர்த்து வந்த குதிரையை தானமாக வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பொன் காளியம்மன் கோவில் உள்ளது. இதில் உள்ள கோவில் குதிரை சில நாட்களுக்கு முன் உடல்நலமில்லால் இறக்க நேரிட்டது. குதிரைக்கும் இங்கு சில பூஜைகள் நடக்கவிருப்பதால், குதிரை இல்லாத நிலையில் கோவில் நிர்வாகிகள் செய்வதறியாது இருந்தனர். குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம் பகுதியில் வசிக்கும் விஸ்வநாதன், 32, என்ற விவசாயி, குதிரை ஒன்றை ஆசையுடன் வளர்த்து வந்தார். இந்த கோவிலில் குதிரை இல்லாதது அறிந்து, தான் ஆசையுடன் வளர்த்து வந்த குதிரையை கோவிலுக்கு வழங்க முன்வந்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குதிரைக்கும் பூஜைகள் செய்யப்பட்டன. இந்த குதிரையை அம்மனுக்கு தானமாக வழங்குவதாக கூறி, கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். கோவில் நிர்வாகிகள் விஸ்வநாதனுக்கு நன்றி தெரிவித்தனர்.