அத்துமீறலில் ஈடுபடும் தி.மு.க.வினர் வரும் தேர்தலில் பாடம் புகட்ட முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்

குமாரபாளையத்தில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் அத்துமீறலில் ஈடுபடும் தி.மு.க.வினர் வரும் தேர்தலில் பாடம் புகட்ட முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்

Update: 2024-08-21 12:53 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில், அத்துமீறலில் ஈடுபடும் தி.மு.க.வினருக்கு, வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். குமாரபாளையம் 18 வார்டு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: தேர்தலில் தோல்வி குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர் அட்டைகளை வார்டு செயலர்கள் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு சென்று சேர்வது இல்லை. எல்லோருக்கும் முதலில் உறுப்பினர் அட்டை கொடுக்க வேண்டும், என்று கூறியதன் பேரில், மாநிலம் முழுதும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்து வருகிறது. தி.மு.க.வினர் செல்லும் இடமெல்லாம் அத்துமீறல். ஓட்டல் கடையில் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் கொலை செய்கிறார்கள். கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் கொஞ்ச நாள்தான். அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அடுத்த ஆட்சி அ.தி.மு.க.ஆட்சி அமைய அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் நகர துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், முன்னாள் நகர செயலர் குமணன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அர்ஜுனன், உள்பட பலர் பங்கேற்றனர். .

Similar News