நிதி நிறுவனங்கள் நெருக்கடியால் தூக்கிட்டு பெண் தற்கொலை
பள்ளிபாளையத்தில் நிதி நிறுவனங்கள் நெருக்கடி தந்ததால் மனம் உடைந்த பெண் வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் அப்பகுதியில் உள்ள ஆறு மகளிர் குழுக்களுக்கு தலைவியாக இருந்து வந்துள்ளார் . இந்நிலையில் மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கு சுய உதவிக் கடன்கள், மைக்ரோ பைனான்ஸ், மற்றும் வெளிப்பகுதிகளில் பெற்று தந்துள்ளார் . இதில் கடன் வாங்கிய சில பெண்கள் குடும்பத்துடன் தலைமறைவு ஆகிவிட்டனர். இதன் காரணமாக கடன் பெற்று கொடுத்த சுஜாதா தான் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும், தனியார் நிதி நிறுவனங்களும் தொடர்ந்து வற்புறுத்தியதால், அவற்றை செலுத்துவதற்காக மேலும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியுள்ளார். இவற்றை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில், மைக்ரோ பைனான்ஸ் நிர்வாகிகளும், நிதி நிறுவன உரிமையாளர்களும் சுஜாதா மற்றும் அவர் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளாலும் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செவ்வாய்க்கிழமை அன்று தனது உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வருவதற்காக ஈரோடு அருகே உள்ள சோலார் என்ற ஊருக்கு சுஜாதா சென்று விட்டார். இதை தவறாக புரிந்து கொண்ட அருகில் வசிக்கும் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் பெண்மணி ஒருவர் சுஜாதா ஊரை விட்டு ஓடி விட்டதாக கூறி, சுஜாதாவின் மகன் தனுசுவை தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று இரவு வீட்டுக்கு வந்த சுஜாதாவை கவிதா என்கிற பெண்மணி தகாத வார்த்தைகள் பேசி திட்டியதால், மனம் உடைந்த சுஜாதா தான் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததாலும், மற்றவர்கள் பெற்ற கடனை தன்னை கட்ட வலியுறுத்தி, துன்புறுத்துவதாலும் மனவேதனையுடன் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக , பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். சுஜாதாவின் இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும், நிலையில் சுஜாதாவின் உறவினர்கள் சுஜாதாவின் தற்கொலைக்கு காரணமான கவிதாவை கைது செய்ய வேண்டும். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதனையடுத்து காவல் உதவி கண்காணிப்பாளர் இமைவரம்பன் தலை மறைவாக உள்ள கவிதா நிச்சயம் கைது செய்யப்படுவார் என்றும், மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் நிதி நிறுவனங்களில் நெருக்கடியால் வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.