தேமுதிகவை சேர்ந்த விஜய பிரபாகரன் பேட்டி
தேமுதிக கட்சி கொடி ஏற்றி வைக்கும் நிகழ்வு
பாஜக - திமுக கள்ள உறவு போல தான் தெரிகிறது. தேர்தலின் போது கூட்டணி குறித்து கட்சியின் முக்கிய தலைவர்கள் பேசி முடிவு அறிவிப்பார்கள் என்று தேமுதிக விஜய.பிரபாகரன் பெரம்பலூரில் தெரிவித்தார் தேமுதிகவை சேர்ந்த விஜய பிரபாகரன் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்து, அக்கட்சியின் மீனவர் அணி மாவட்ட நிர்வாகியின் இல்ல காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் வந்திருந்தார். தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த அவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கட்சி கொடியை ஏற்றி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விஜய பிரபாகரன், தமிழக அரசு 3 முக்கிய தலைவர்களுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை வாபஸ் பெற்றிருப்பது குறித்து கேட்டபோது, தற்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாத நேரத்தில் இரண்டு பெண் தலைவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை வாபஸ் பெற்றிருப்பது ஏற்கக் கூடியது அல்ல. தமிழகத்தில் பெண் தலைவர்கள் ஆளுமைக்கு வரும் பொழுது அவர்களுக்கு காவல் துறையும், அரசும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்பொழுது கேப்டன் இல்லாத நிலையில் அம்மாவுக்கு பாதுகாப்பு வழங்கியது, அந்த ஏரியாவுக்கே பாதுகாப்பாக இருந்தது என்றார். நடிகர் விஜய் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பிய போது, நடிகர் விஜய் அண்ணன், கேப்டன் இறந்ததிலிருந்து நேரில் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கான சந்தர்ப்பம் அமைந்ததால் நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்தோம் அப்பொழுது இயக்குனர் உள்ளிட்டோருடன் த.வெ.க தலைவர் விஜய வந்திருந்தார். இதில் அவர் நடித்து வரவுள்ள கோட் திரைப்படம் தொடர்பாக பேசினார். திமுக - பாஜக இடையே கள்ள உறவு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாரே என்று கேட்டபோது, வேண்டுமென்றால் வைத்துக் கொள்வதும் வேண்டாமென்றால் விலகி விடுவதும் திமுக செய்வது தான். அவர்கள் தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு பேசி வருகின்றனர். இவர்கள் உறவு கள்ள உறவாக தான் தெரிகிறது. மாற்றுக் கட்சியினர் இதுபோல நடந்து கொண்டால் அவர்களை அவமதித்து சங்கிகள் என்று விமர்சனம் செய்வார்கள். திமுக தற்போது சிறுபான்மையினரை புறந்தள்ளி வருகின்றார்கள் அவர்கள் மீதான பாசம் எங்கே போனது என்று தெரியவில்லை என்றார். மேலும் திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பது அவர்கள் நடந்து கொள்வதை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்றார். வருகின்ற சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து கேட்டபோது அதனை கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து பேசி முடிவு அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரகுபாடி, தெற்கு மாதவி, சிறுகன்பூர், எஸ்.குடிகாடு, சாத்தனூர், கொளக்காநத்தம் மற்றும் கூடலூர் ஆகிய கிராமங்களில் கட்சி கொடி ஏற்றியதை தொடர்ந்து, குன்னம் அருகே உள்ள மருதையான் கோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஆதிமூலம் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சாமி.ஐயப்பன், அரியலூர் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.