மதுரை மாவட்டம் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ்

பேரையூர் வட்டம், எழுமலை பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா ஆய்வு

Update: 2024-08-22 14:56 GMT
மதுரை மாவட்டம் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பேரையூர் வட்டம், எழுமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தனது மகனின் கல்விக்கு உறுதுணையாக இருந்த அரசுப் பள்ளிக்கு ஊதியம் பெறாமல் மராமத்துப் பணிகளை மேற்கொண்ட கட்டிடப் பணியாளரின் நெகிழ்வான செயலைப் பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி ஒருத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வேண்டும் என அறிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, பேரையூர் வட்டத்தில் அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். குறிப்பாக எழுமலை பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள வருகைபுரிந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் உரிய முறையில் மருத்துவப் பணியாளர்களால் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களிடம் பாடதிட்டங்கள் குறித்து உரையாடினார். மேலும், பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் ஆசிரியர் வருகை பதிவேடு, மாணவர்களின் வருகை பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளியில் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து டி.கல்லுப்பட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்பு, பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தனது மகனின் கல்விக்கு உறுதுணையாக இருந்த எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஊதியம் பெறாமல் மராமத்துப் பணிகளை மேற்கொண்ட உத்தபுரத்தை சேர்ந்த கட்டிட பணியாளர் அழகு முருகன் என்பவரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறிவுரையின் பேரில் கட்டிட பணியாளர் திரு.அழகு முருகன் மராமத்துப் பணிகளை மேற்கொண்டார். 3 நாட்கள் பல்வேறு மராமத்துப் பணிகள் மேற்கொண்ட பின்பு அதற்கான ஊதியத்தை வழங்கிய போது 'இப்பள்ளி என் மகனுக்கு எவ்வளவோ செய்து உள்ளது. எனது மகன் பீமன் இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்து விட்டு தற்போது திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பிஏ படிக்கிறார். எனது மகனின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய பள்ளிக்கு ஏதோவொரு வகையில் உதவி செய்ய வேண்டும் என எண்ணினேன். என் வேலை பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும்' எனக் கூறியுள்ளார். ஊடகங்களிலும் இது தொடர்பாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அழகு முருகன் அவர்களின் தன்னலம் கருதாத நெகிழ்வான செயலை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து, பேரையூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, இரண்டு நாள் கள ஆய்வுப் பணி மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல்,பேரையூர் வட்டாட்சியர் செல்லபாண்டியன், பேரையூர், கல்லுபட்டி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள்,பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துறை அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News