சேலம் மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து
அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் 2025-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்த பணிகள் மற்றும் வாக்குச்சாவடிகள் மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சேலம் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் பேசியதாவது:- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்குச்சாவடி அமைவிடம் மாற்றம், கட்டிட மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களின் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் வருகிற 26-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். மேலும் இந்த வாக்காளர் பட்டியலை சீர் செய்யும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரும் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று கள ஆய்வு பணி மேற்கொள்ள வேண்டும். அப்போது வாக்காளர் பட்டியலில் உள்ள இறப்பு, நிரந்தர குடிமாற்றம், முகவரி திருத்தம் மற்றும் 17 வயது மேற்பட்டோர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களுடைய சம்பந்தப்பட்ட வாக்குசாவடி முகவர்கள் மூலம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு பணி 20.8.2024 முதல் 18.10.2024 வரை நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் சிறப்பு சுருக்க முறை திருத்த காலத்தில் குடிமாற்றம், இறப்பு, 17 வயதிற்கு மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை கள ஆய்வில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி உரிய மாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.