சித்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்
அருள் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
சேலம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி, சித்தனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மிகவும் பழுதடைந்த, ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் அருள் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்துபள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். இப்பள்ளி அமைந்துள்ள இடத்தை கொடுத்த பொன்னுசாமி குடும்பத்தினர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார், பின்னர் அருள் எம்.எல்.ஏ. கூறுகையில், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவின் பால் பண்ணை அருகில் உள்ள சேலம்-தாரமங்கலம் சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. பொதுமக்களின் நலனையும், வாகனம் ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி பால்பண்ணை அருகில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பசுமை தாயக நிர்வாகிகள் சத்திரிய சேகர், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.