பேட்டரி வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை
வழக்கில் நிறுத்தப்பட்டு இருக்கும் பேட்டரி வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. 21 வார்டுகளிலும் தினந்தோறும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் குப்பைகளை பெற்று வருகின்றனர். இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேட்டரி வாகனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பேட்டரி வாகனத்தின் மூலமாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பள்ளிபாளையம் போலீஸாரால் பேட்டரி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிபாளையம் காவல் நிலையம் வெளியே நிறுத்தப்பட்டது . தொடர்ந்து இரண்டு மாத காலத்திற்கு மேலாக வழக்கு நிலுவையில் இருப்பதால், புதிதாக வாங்கப்பட்ட பேட்டரி வாகனம் துருப்பிடித்து, மழை வெயிலில் காய்ந்து சேதமடைந்து வருகிறது. மேலும் இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க குப்பை வாகனம் வராததால், குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் பாதிப்பு உருவாகியுள்ளது .எனவே அரசு பொது சொத்தை பாதுகாக்கும் வகையில் பள்ளி பாளையம் போலீசார் விரைந்து வழக்கை முடித்து நகராட்சி பேட்டரி வாகனத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.....