கதிர்நரசிங்கபெருமாள் கோவிலுக்கு கோபிநாதசுவாமி வருகை

ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி ஏகாந்தசேவை அலங்காரத்தில் மலையிலிருந்து கீழே இறங்கி மண்டகபடியில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Update: 2024-08-28 04:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள மலைக்கோவிலான அருள்மிகு கோபிநாதசுவாமி கோவிலிலிருந்து உறியடித்திருவிழாவிற்காக மலைக்கோவிலின் உபகோவிலான அருள்மிகு கதிர்நரசிங்கபெருமாள் கோவிலுக்கு கோபிநாதசுவாமி வருவது வழக்கம் மலையிலிருந்து கீழே இறங்கி ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கபெருமாள் கோவிலுக்கு வரும்பொழுது வரும் வழியில் உள்ள கிராமங்களில் மண்டகப்படியில் தங்கி கோபிநாதசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இவ்வருட உறியடித்திருவிழாவை முன்னிட்டு ஏகாந்த சேவை அலங்காரத்துடன் மலை அடிவாரத்திற்கு வந்த கோபிநாதசுவாமி அங்கிருந்து புறப்பட்டு எல்லப்பட்டி, இராமலிங்கபட்டி, கட்டசின்னாம்பட்டி, எர்னம்பட்டி வந்து அதன்பின்பு ரெட்டியார்சத்திரம் அறநிலையத்துறை அலுவலகத்தில் தங்கி அருள்பாலித்தார். வரும் வழியில் உள்ள கிராம மக்கள் கோபிநாதசுவாமிக்காக காத்திருந்து அபிஷேக ஆராதனைகள் செய்து நேர்த்திகடனுக்காக பரிவட்டம் கட்டிக்கொண்டனர். புதன்கிழமை காலையில் புறப்படும் கோபிநாதசுவாமி எல்லப்பட்டி வழியாக குளத்துப்பட்டி, முத்துராம்பட்டி, டி.புதுப்பட்டியில் ஊர் பொது மண்டகப்படியில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வியாழக்கிழமை ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் முன்பு நடைபெறும் உறியடித்திருவிழா முடிந்தவுடன் மறுநாள் காலை கோபிநாதசுவாமி மலைக்கு புறப்பட்டு செல்கிறார். கோபிநாதசுவாமி மலையை விட்டு இறங்கி வருவது தெரிந்தவுடன் கிராம மக்கள் தங்கள் வீடு முன்பு கோலமிட்டு சுவாமியை வரவேற்றவண்ணம் உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு கோபிநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் அறங்காவலர்கள் கோபிநாத், கிரி, கோபாலகிருஷ்ணன் தலைமையிலான விழா கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்.பி.ஆர்.சச்சிதானந்தம் குடும்பத்தினர் மற்றும் எல்லப்பட்டி ராமகிருஷ்ணன், கோட்டைபட்டி கமலகண்ணன், கட்டசின்னாம்பட்டி ஒன்றியகுழு உறுப்பினர் காளீஸ்வரி மலைச்சாமி, ஒன்றிய திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கோவில் கண்ணன், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் கனேஷ்பிரபு, மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News