கந்துவட்டி கொடுமையால் தற்கொலை பெண் கைது
கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சுஜாதா விவகாரத்தில் கவிதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் அப்பகுதியில் உள்ள ஆறு மகளிர் குழுக்களுக்கு தலைவியாக இருந்து வந்துள்ளார் .மேலும் மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கு ,சுய உதவிக் கடன்கள், மைக்ரோ பைனான்ஸ், மற்றும் வெளிப்பகுதிகளில் கடன் பெற்று தந்துள்ளார் . இதில் கடன் வாங்கிய சில பெண்கள் பொருளாதார சூழல் காரணமாக கடன்களை கட்ட முடியாமல் குடும்பத்துடன் தலைமறைவு ஆகிவிட்டனர். இதன் காரணமாக கடன் பெற்று கொடுத்த சுஜாதா தான் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும், தனியார் நிதி நிறுவனங்களும் தொடர்ந்து வற்புறுத்தியதால், அவற்றை செலுத்துவதற்காக. வீட்டின் அருகே உள்ள கவிதா என்ற பெண்மணியிடம் முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கட்டியும் கூடுதல் வட்டி கேட்டு கவிதா தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இவற்றை திருப்பி செலுத்த முடியாத நிலையில் சுஜாதாவை கவிதா தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளார். இதனால் மனம் உடைந்த சுஜாதா தான் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததாலும், மற்றவர்கள் பெற்ற கடனை தன்னை கட்ட வலியுறுத்தி, துன்புறுத்துவதாகவும், மனவேதனையுடன் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி வீடியோ பதிவிட்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுஜாதாவின் உறவினர்கள் சுஜாதாவின் தற்கொலைக்கு காரணமான கவிதாவை கைது செய்ய வேண்டும். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் போலீசாரின் தீவிர தேடுதலில் திருப்பூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கவிதாவை சனிக்கிழமை அன்று இரவு பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து குமாரபாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்பு சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.