அமைச்சர் அனிதா டெல்லி பயணம்: மீனவர் சங்கம் விளக்கம்!
அமைச்சர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தருவைகுளம் மீனவர்களுக்காகத்தான் டெல்லி சென்றார் என்ற சமூக பிரிவினையை உருவாக்கும் பரப்புரையை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று அகில இந்திய மீனவர் சங்கம்ம் விளக்கம் அளித்துள்ளது.
அமைச்சர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தருவைகுளம் மீனவர்களுக்காகத்தான் டெல்லி சென்றார் என்ற சமூக பிரிவினையை உருவாக்கும் பரப்புரையை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று அகில இந்திய மீனவர் சங்கம்ம் விளக்கம் அளித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி டெல்லியில் சந்தித்தார். அதில் தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், ஜூலை 31 ம் தேதி பாதிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களுக்கு குரல் கொடுக்காமல், ஆகஸ்டு 5ம் தேதி இரவு தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்காக, அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் உடனடியாக டெல்லி சென்றார் என்றும், மீனவர்கள் இடையே சமூக ரீதியில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பாகுபாடு பார்ப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியில் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர் அன்டன் கோமஸ் இன்று (செப்.,6 ) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: கடந்த ஜூலை 31 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது அன்றிரவு சுமார் 10 மணிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் வேண்டுமென்றே ரோந்து கப்பலை இராமேஸ்வர மீனவர்கள் படகு மீது மோதச் செய்தனர். இதில் படகு கடலுக்குள் மூழ்கியது. அப்போது, 2 மீனவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழக மீன்வளத்துறை, மத்திய அமைச்சரை சந்திக்க நேரம் கோரப்பட்டபோது, 6 ஆம் தேதி சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆகஸ்டு 5 ஆம் தேதி மாலை 6:50 மணியளவில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமைலான குழு டெல்லி சென்று இருந்த நிலையில், ஆகஸ்டு 5ஆம் தேதி இரவு 9 மணி அளவில் தருவைகுளம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதன் மூலம் அமைச்சர் டெல்லியில் இருக்கும் போது தான் தருவைகுளம் மீனவர்கள் கைதானதும், டெல்லி சென்ற குழுவில் தருவைகுளம் மீனவர்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லை என்பதும், அமைச்சரின் டெல்லி பயணம் ராமேஸ்வரம் மீனவர் படுகொலை தொடர்பாகத்தான் என்பதும் தெளிவாகிறது. உண்மை நிலை இப்படி இருக்க, அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் டெல்லி சென்றது தருவைகுளம் மீனவர்களுக்காகத்தான் என்றும், அவர் பாரம்பரிய மீனவர்களை புறக்கணிக்கிறார் எனவும் பிரிவினைவாத பரப்புரை சில யூடியூப், வார பத்திரிக்கை, வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் மூலம் பரப்புரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த பரப்பரைக்கும் மீனவர்களுக்கும் தொடர்பு இல்லை. இதை எந்தவொரு மீனவர்களும் நம்பவில்லை. மீனவர்கள் மத்தியில் பாரம்பரிய மீனவர்கள், தொழில் ரீதியான மீனவர்கள் என்ற பிரிவினை, பாகுபாடு இல்லை. சமூக ரீதியான சலுகைகள் பாரம்பரிய மீனவர்களுக்கு மட்டும் என்றும், தொழில் ரீதியான சலுகைகள் அனைத்து மீனவர்களுக்கும் பொருந்தும் என்றும், அனைவரும் இணைந்து போராடினால் தான் கார்ப்பரேட் ஆதிக்க அரசியலில் இருந்து நம் வாழ்வாதார, வாழ்விட உரிமைகளை காக்க முடியும் என்ற புரிதலில் ஒற்றுமையாக அனைத்து மீனவர்களும் உள்ளனர். மேலும் கடலில் எந்த மீனவர் பாதிக்கப்பட்டாலும் ஜாதி, மத, மாநில, தேச பேதமின்றி அவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவதை தங்கள் சத்தியவாக்காக கொண்டவர்கள் மீனவர்கள். மேற்கண்ட மீனவர்கள் பின்பற்றும் உயரிய நெறியில் உருவானதும் நம்பிக்கை கொண்டதும் இயங்குவதுமான அமைப்பு அகில இந்திய மீனவர் சங்கம் ஆகும். நாடு முழுக்க ஜாதி மத மொழி பேதமின்றி மீனவர்களை உறுப்பினராக கொண்ட 39 வருட வரலாறு கொண்ட இயக்கம், இத்தகைய பிரிவினைவாத பரப்புரையை, அமைதியான பார்வையாளராக வேடிக்கை பார்க்க முடியாது என்ற நிலைபாட்டில் இருப்பதால், அமைச்சர் தருவைகுளம் மீனவர்களுக்காகத்தான் டெல்லி சென்றார் என்ற சமூக பிரிவினையை உருவாக்கும் பரப்புரையை வன்மையாக கண்டிக்கின்றோம். உத்தர பிரதேச பாஜக அரசில் பங்கேற்கும் நிஷாத் கட்சியின் பின்னணியிலான, மதவாத, பிரிவினவாத அரசியல், தமிழ் மண்ணில் மீனவர் மத்தியில் எடுபடாது. மீனவர் துயரில் கரம் கொடுங்கள் வரவேற்கிறோம். அதை விடுத்து துயரை பெருந்துயராக்கும் பிரிவினைவாத அரசியல் வேண்டாம். நடந்தவை கடந்தவையாக மறப்போம். மீனவர் துயர் துடைக்க முயல்வோரை நன்றியுடன் வாழ்த்துவோம். குறைகளை சுட்டிக்காட்டுவோம். நிறைகளை போற்றுவோம். மீனவர்கள் நன்றி மறவாதவர்கள் எனும் பாரம்பரியத்தை காப்போம். மீனவராய் ஒன்றுபடுவோம் கோரிக்கைகளை வென்றெடுப்போம். என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய அமைப்பு செயலாளர் சேவியர், தூத்துக்குடி பொறுப்பாளர் சசிகுமார், ராமநாதபுரம் விசைப்படகு சங்க தலைவர் ஜேசுராஜா, பொருளாளர் சகாயம், பாம்பன் நாட்டு படகு சங்க தலைவர் ராயப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.