சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணமாக வந்த வெளிநாட்டினருக்கு மங்கலம்பேட்டையில் வரவேற்பு
சுற்றுலா துறை சார்பில் அளிக்கப்பட்டது
சுற்றுச்சூழலை பாதுகாத்தல், காற்று மாசுபடுதலை தவிர்த்தல், ஆரோக்கியமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல், இயற்கை உணவு முறைகளைக் கொண்டு ஆரோக்கியமான உடல் நலம் பேணுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் சார்பில், 7 நாட்கள் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சியில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய இந்த சைக்கிள் விழிப்புணர்வு பயணமானது திருச்சி, கொல்லிமலை, கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், ஆண்டிமடம், கும்பகோணம் ஆகிய ஊர்கள், வழித்தடங்கள் வழியாகச் சென்று நாளை 28-ஆம் தேதி மீண்டும் திருச்சியில் நிறைவடைகிறது. கடலூர் மாவட்டத்தில், சைக்கிளில் சுற்றுப் பயணமாக வந்தவர்களுக்கு சுற்றுலாத் துறையினர் சார்பில், மாவட்ட எல்லைப் பகுதியான மங்கலம்பேட்டையில், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் கண்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட எல்லை முடிகின்ற கருவேப்பிலங்குறிச்சி வரை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் சுற்றுப்பயண இயக்குநர் ராஜாராம் தலைமையிலான இந்தக் குழுவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என 75 பேர் இந்த சைக்கிள் விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.