கடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் திட்டப்பணிகள்
மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
கடலூர் மாவட்டம். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாத்தூர். தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, கீழ்அழிஞ்சிபட்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிபொறுப்பேற்றது முதல் ஊரக மக்களின் நலன் கருதியும், கிராமப்புறங்களை மேம்படுத்தவும் கலைஞரின் கனவு இல்லம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். 15-வது நிதிக்குழு மான்யத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாதூர் ஊராட்சியில் அப்பர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டுமான பணிகளையும், அயோதிதாஸ் பண்டிதர் திட்டத்தின் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், கிராம குளத்தினை புனரமைப்பதற்கான திட்டம் மதிப்பீடு தயார் செய்திடும் வகையிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, தூக்கணாம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டுமான பணிகளையும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள பள்ளி சுற்றுச்சுவற்றினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையினையும், கீழ்அழிஞ்சிபட்டு ஊராட்சியில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருளர் இன மக்களுக்காக தலா ரூ.4.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 7 குடியிருப்புகள் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள். தெரு விளக்குகள், சாலை வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும், மழைக் காலங்களில் நீர் வடிந்தோடுவதற்கு ஏதுவாக நீர்வழித்தடங்களில் அடைப்பு ஏற்படாவண்ணம் தொடர்ந்து கண்காணிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் வீடுகள்தோறும் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபடவும். பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதற்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தூய்மை பணிகள் மேற்கொள்ள அந்தந்த பகுதிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளபடி சரியான எண்ணிக்கையில் தூய்மைப் பணியாளர்களை வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகாரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து தங்கள் பகுதிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கவும், காய்ச்சல் ஏற்படாவண்ணம் சுடுதண்ணீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மழைக்காலம் என்பதால் குளோரின் கலந்த குடிநீரை வழங்கவும், அவ்வப்போது மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யவும், சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதிகளை சரிவர பராமரிக்கவும், மேலும், ஊரக வளர்ச்சித் துறை மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் போது, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், உதவி செயற்பொறியாளர் டார்வின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, பார்த்திபன் உட்பட பலர் உள்ளனர்.