சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு
சித்தாமூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
சித்தாமூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த இலத்தூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் மகன் சந்தோஷ் (30). இவரது நண்பர் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (29). இருவரும் பவுஞ்சூரில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். காரை சந்தோஷ் ஓட்டி வந்துள்ளார். முதுகரை அடுத்துள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள இலுப்பை மரத்தின் மீது சென்று பலமாக மோதியது. இதில் கார் முற்றிலும் உருக்குலைய கார் ஓட்டி வந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை கண்டு அங்கு கூடிய போது மக்கள் பலத்த காயமடைந்த கார்த்திக்கை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கார்த்திக்கும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சித்தாமூர் போலீசார் இறந்த இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சித்தாமூர் போலீசார் இருவரும் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தினரா அல்லது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.