நாகை மாவட்டத்தில் ஆண்கள் உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி
தொடங்க மாவட்ட வளர்ச்சி குழுமம் முதல்வருக்கு கோரிக்கை
நாகை மாவட்ட வளர்ச்சி குழும தலைவர் என்.பி.பாஸ்கரன், தமிழக முதல்வர், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அண்ணாதுரை. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது காவிரி டெல்டா மாவட்டங்களின் வடிகாலாக நாகை மாவட்டம் விளங்குகிறது. இதனால் ஆண்டு தோறும் ஏற்படும் இயற்கை பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள். விவசாய தொழிலாளர்கள் வேலை இன்றி பிழைப்பு தேடி திருப்பூர். கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். நாகை மாவட்டத்தில், தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால், பின்தங்கிய மாவட்டமாக நாகை மாவட்டம் இருந்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் இல்லாததால் பொதுமக்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். இதனால், ஏழை எளிய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை மேல்நிலை கல்வி பயில தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வசதி இல்லாததால், பாதியிலேயே தங்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரணியம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில், அரசு ஆண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாகை மாவட்டத்தில், நாகையில் மட்டுமே நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆனால், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட இல்லை. ஆனால், தனியார் மேல்நிலைப் பள்ளிகள் அதிக அளவில் உள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் 12-ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்றால் தனியார் பள்ளிகள் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை கட்ட முடியாமல், ஏழை எளிய மாணவர்கள் 8 அல்லது 9-ம் வகுப்புடன் தங்கள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். எனவே, ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கள் மேல்நிலைப் படிப்பை தடங்கல் இன்றி தொடர, நாகை நகரம், வேதாரணியம், கீழ்வேளூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அரசு ஆண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.