தூத்துக்குடியில் தப்பியோடிய கைதி கைது!
தூத்துக்குடியில் போலீசார் பிடியில் தப்பியோடிய கைதியை 2 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல்காதர் (32). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆறுமுகநேரி போலீசாரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தார். நேற்று ஆறுமுகநேரி போலீசார் முகமது அப்துல் காதரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் 2 பேர் தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து கொண்டு இருந்தது. அப்போது அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடினார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஆறுமுகநேரி அருகே முகமது அப்துல்காதர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார், அங்கு சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். கைதி தப்பியோடிய 2 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.