இளைஞரின் முயற்சியால் ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு
நத்தம் அருகே காட்டுப்பட்டியில் இளைஞரின் முயற்சியால் ஆதரவற்ற மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புதிய வீடு கட்டி திறக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பட்டியில் வசித்து வருபவர் பார்வதி பாட்டி (வயது 75). கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகி ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார். மிகவும் சிதிலமடைந்த, ஆபத்தான நிலையில் இருந்த குடிசை வீட்டில் வசித்து வருவதை கண்ட பசியில்லா தேசம் உருவாக்குவோம் அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி பார்வதி பாட்டிக்கு பாதுகாப்பான ஒரு வீட்டை கட்டித்தர முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து சில நண்பர்கள் மூலம் உண்மை நிலையை கண்டறிந்து பசியில்லா தேசம் உருவாக்குவோம் அறக்கட்டளையினர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் பசியில்லா தேசம் உருவாக்குவோம் அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூபாய் 1 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி முடித்தனர். இந்த வீட்டின் திறப்பு விழா நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அமலாதேவி, செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தனர். தனக்கு உதவிய அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாட்டி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பார்வதி பாட்டிக்கு 6 மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள், சோலார் லைட், சேலை மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், இந்த முயற்சி சிறப்பான முயற்சி என்றும், ஆதரவற்றோருக்கு உதவுவது கடவுளுக்கு சேவையாற்றுவது போன்றது என்றும், இந்த பணி செய்த அனைவருக்கும் வாழ்த்து கூறி, பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பசியில்லா தேசம் உருவாக்குவோம் அறக்கட்டளை நிர்வாகி பிரேம் நன்றி தெரிவித்தார். மேலும் தனது தன்னார்வ மனிதநேய சேவைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.