குஜிலியம்பாறை வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்
குஜிலியம்பாறை வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் மற்றுமொரு திட்டமாகும். இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், அப்பகுதியில் அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது ஆறாம் கட்டமாக வரும் 18.09.2024 அன்று குஜிலியம்பாறை வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதை முன்னிட்டு 11.09.2024 அன்று குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள கோட்டாநத்தம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், கோவிலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலையைிலும், குஜிலியம்பாறை வட்டத்தில் அந்தந்த உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களிலுள்ள பொதுமக்களிடம் காலை 09.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை மனுக்கள் பெறப்படவுள்ளது. மேலும் 18.09.2024 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் நாளில் அந்தந்த கிராமங்களுக்கு ஆய்வுக்காக நியமிக்கப்படும் அலுவலரிடமும் மனு அளிக்கலாம். எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.