இன்டர்சிட்டி ரயில்: ஆயத்த பணிகள் விரைவில் தொடக்கம்!

தூத்துக்குடி - திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவதற்காக ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-09-12 05:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி - திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவதற்காக ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திருச்சி - திருவனந்தபுரம், கோவை-சென்னை உள்பட பல நகரங்களுக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்குகின்றன. பெரும்பாலும் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வகையில் தற்போது நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி திருவனந்தபுரத்துக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவனந்தபுரம், தூத்துக்குடியில் துறைமுகங்கள் உள்ளன. அதை சார்த்த பல்வேறு தொழில் நிமித்தங்களுக்கான ஆயிரக் கணக்கானவர்கள் இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்தும் திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களுக்கும், திருவனந்தபுரத்துக்கும் ஆயிரக் கணக்கான மக்கள் செல்கிறார்கள். இந்த மக்களின் வசதிக்காக இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் தூத்துக்குடி திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாக மாறி உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வர இருக்கிறது. திருவனந்தபுரத்தில் ஐ.எஸ் ஆர்.ஓ. மையம் அமைந்துள்ளது. குமரி, திருநெல்வேலி எல்லையில் மகேந்திரகிரியில் ஐ.எஸ்.ஆர்.ஓ. மையம் அமைந்துள்ளது. தொழில் சார்ந்த பல்வேறு விஷயங்கள் தூத்துக்குடி, திருவனந்தபுரம் நகரங்களில் உள்ளன. எனவே இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்விட்டபல தரப்பட்ட மக்களின் நலன்களுக்கான இரு நகரங்களுக்கும் இடையே இன்டர்சிட்டி ரயில் சேவை என்பது உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ரயில்வே துறைக்கு, நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் டவுன் ரயில்வே நகரை சேர்ந்த மோகன் என்பவர் ரயில்வே துறைக்குகோரிக்கை மனு அனுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே நிர்வாகம் தூத்துக்குடி - திருவனந்தபுரம் இடையே நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி வழியாக இன்டர்சிட்டி ரயில் இயக்குவதற்கான பரிசீலனை உள்ளது. விரைவில் இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும் என கூறி உள்ளது. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்துகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து முழுமையாக இயங்கும் பட்சத்தில் இந்த வழித்தடங்களில் இட நெருக்கடி குறையும். எனவே கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். அந்த வகையில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி. விழுப்புரம் வழியாக சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக் கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Similar News