பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நூற்றாண்டு விழா கட்டடத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கந்தசாமி கண்டர் பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு விழா (1924 - 2024) கட்டடத்தை திறந்து வைத்தார்

Update: 2024-09-12 16:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், நன்செய் இடையார், கந்தசாமி கண்டர் தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ ஆகியோர் தலைமையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இராஜேந்திரன் மற்றும் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கந்தசாமி கண்டர் பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு விழா (1924 - 2024) கட்டடத்தை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பே பொன், பொருள், மண் உள்ளிட்டவை சேர்க்க நினைக்கும் கால கட்டத்தில் தனது சொத்துக்களை இந்த சமுதாயம் மேம்பட வேண்டுமென்றால் கல்வி அறிவு மட்டுமே தேவை என்பதை உணர்ந்து உயரிய நோக்கத்துடன் தன்னுடைய அனைத்து செல்வங்களையும் கல்விக்காக வழங்கி அறநிலையத்தை தொடங்கியவர் நம் கந்தசாமி கண்டர் ஐயா அவர்கள். அவர்களது சேவையால் பல்வேறு மாணவ செல்வங்கள் கல்வி கற்று வாழ்வில் உயர்நிலை அடைந்துள்ளார்கள். பெற்றோர்கள் ஒரு போதும் தங்கள் குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி திறமை உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். அரசுப்பள்ளி நமக்கு எல்லாம் பெருமை. அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது தனி திறமையால் மாணவ செல்வங்களுக்கு நல்லொழுக்கம் மற்றும் நல்ல கல்வியை கற்று தந்து இந்த சமுதாயத்தில் அவர்களை உயர்நிலையை அடைய செய்துள்ளார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழித்து அவர்களிடம் கலந்துரையாடி அவர்களது தனி திறமையை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். இப்பள்ளி 100 ஆண்டு காலம் கடந்தும் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு மிக முக்கிய காரணம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தான். மாணவ செல்வங்கள் தங்கள் திறமைகளை விளையாட்டுகளிலும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். பள்ளி வகுப்பறை மட்டுமே கல்வி கற்கும் இடம் இல்லை. விளையாட்டு மைதானமும் கல்வி கற்றுகொடுக்கும் இடம் தான். முன்னாள் மாணவர்கள் தாய் உள்ளத்தோடு தான் பயின்ற பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றார்கள். பல்வேறு அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள், மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும் இடம் தான் பள்ளிகள். நம் தமிழ்நாடு அரசு அத்தகைய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகின்றது. நாம் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என அறிஞர் அண்ணா அவர்களின் கூற்றிற்கு ஏற்ப ஏழை, எளிய மாணவ செல்வங்களுக்கு கல்வி அளிப்பது நம் நாட்டிற்கு நாம் செய்யும் பெருமை என்ற உயரிய நோக்கில் செயல்பட்ட பெருமைக்குரியவர் நம் கந்தசாமி கண்டர் ஐயா அவர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் ஒரு தலைமுறை கல்வி கற்றால் அவர்களை தொடர்ந்து அவர்களது தலைமுறையும் கல்வி பெறும் என கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர். எனவே, கல்வி ஒன்றே நம் வாழ்வை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டு மாணவ செல்வங்கள் நன்கு கல்வி கற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்கள். வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திரத்திற்கு முன்பே ஏழை, எளிய மக்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் 1924 ஆண்டு இக்கல்வி நிறுவனத்தை தொடங்கியவர் கந்தசாமி கண்டர் ஐயா அவர்கள். முதன் முதலில் தொடக்கப்பள்ளியாக தொடங்கி படிபடியாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என உயர்நிலையை அடைந்துள்ளார்கள். தற்போது இந்த கல்வி நிலையங்களில் சுமார் 800 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றார்கள். பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கை தரத்தை இக்கல்வி நிறுவனம் உயர்த்தி தற்போது நூற்றாண்டு நிறைவு செய்துள்ளது. அனைத்து ஏழை, எளிய மக்களும் எனது மக்களே என்ற உயரிய நோக்கில் கல்வி நிறுவனத்தை தொடங்கி சிறப்பாக இன்று வரை செயல்பட்டு வருகின்றது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். எனவே, அனைவரும் கல்வி கற்று தங்கள் பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ தெரிவித்தார்கள். தொடர்ந்து. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 11 ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வன்னியகுல ஷத்திரியர்கள் பொது அறநிலைய பொறுப்பாட்சியர்கள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியத் தலைவர் எம்.ஜெயராமன் (ஓய்வு), கந்தசாமிக்கண்டர் அறநிலையத்தலைவர் மரு.ஆர்.சோமசுந்தரம், பொத்தனூர் பேரூராட்சி தலைவர் ஆர்.கருணாநிதி, வேலூர் பேரூராட்சி தலைவர் திருமதி லட்சுமி முரளி, .பா.நவலடி ராஜா (செல்லப்பா நிறுவனங்கள்), சன் தொலைக்காட்சி நெறியாளர் ராஜா.திருவேங்கடம், அட்மா குழுத்தலைவர் தனராசு, முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) (பொ) ரவி செல்வம், கந்தசாமிகண்டர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பி.மணிமேகலை உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News