பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Update: 2024-09-12 16:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர், பி.ஜி.பி.கல்லூரி அரங்கில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன்‌ ஆகியோர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் .எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் வருகை தந்தாலும் முதல் நிகழ்வாக மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவிப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஒவ்வொரு முறையும் மாணவர்களை சந்திக்கும் போது ஒரு இனம்புரியாத புத்துணர்வு ஏற்படுகிறது. இத்தருணத்தில் மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என அறிஞர் அண்ணா அவர்களின் கூற்று தான் நினைவிற்கு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் விளையாட்டு துறையில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாட்டில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை திறம்பட நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளார்கள். குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் மற்றும் தெற்காசியாவிலேயே முதல் முறையாக பார்முலா 4 கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளை சிறப்பாக வெற்றிகரமாக நடத்தி உள்ளார்கள். ஒட்டுமொத்த உலக பார்வையையும் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி உள்ளதற்கு காரணம் உங்களை போன்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்கனைகள் தான் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். விளையாட்டு துறையில் பதக்கங்களை வெல்லும் போது நீங்கள் சார்ந்த பள்ளி, மாவட்டத்திற்கு மட்டும் அல்ல அது நம் நாட்டிற்கே பெருமை தர கூடிய ஒன்றாகும். நமது விளையாட்டு வீரர்களின் வெற்றி என்பது நமது தேசத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நிகழ்வாகும். இதை உணர்ந்து தான் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி பதக்க பட்டிலில் தமிழ்நாட்டை தேசிய அளவில் 2 ஆம் இடம் பெற செய்துள்ளார்கள். படிப்போடு விளையாட்டிலும் கவனத்தை செலுத்திடும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில், சர்வதேச அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள் என மொத்தம் 100 நபர்களுக்கு விரைவில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பணி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். மாணவ செல்வங்கள் எவ்வித கவன சிதறலுக்கும் ஆளாகாமல் விளையாட்டிலும், கல்வியிலும் கவனம் செலுத்திட வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் கற்று தருவது மட்டும் பாடம் அல்ல. விளையாட்டு மைதானமும் ஒரு வகுப்பறை தான். அதிலும் நாம் பாடம் கற்று கொள்ள முடியும். அணி வீரர்களுடன் விளையாடும் பொழுது தலைமை பண்பு, கலந்துரையாடுதல், வெற்றி பெறும் பொழுது அணி வீரர்களுடன் பகிர்ந்து கொள்வது, தோல்வியுறும் போது அணி தலைவராக பொறுப்பேற்பது, முடிவெடுக்கும் திறன், தன்னம்பிக்கை, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை விளையாட்டிலிருந்து நாம் கற்று கொள்ளலாம். விலங்குகள் பொதுவாக தலை குனிந்த படியே செல்லும், கம்பீரமாக தலை நிமிர்ந்து நடப்பதால் தான் சிங்கத்தை காட்டிற்கு ராஜா என்று அழைக்கின்றோம். அது போல மனிதர்களாகிய நாமும் கம்பீரமாக உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். அதற்கு நாம் அனைவரும் விளையாட்டு துறையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கல்வியோடு தங்களது தனித்திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். இந்த முக்கியத்துவத்தை அறிந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான் விளையாட்டிற்கென ஒரு துறையை உருவாக்கினார்கள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் 12,000-க்கும் மேற்பட்ட கிராமத்திற்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 15 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 8 வட்டங்களாக பிரித்து 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 86 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட போட்டிகளில் 42,320 மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று 8 வட்டத்தில் சுமார் 16,560 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இப்போட்டிகளை சிறப்பாக ஒருங்கிணைந்த நமது ஆசிரியர் பெருமக்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் விளையாட்டில் பங்கேற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் லீக் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்கள். வனத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென பல்வேறு திட்டங்கைள தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட செயல்படுத்தி வருகிறார்கள். இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை வந்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்து நிறைவேற்றி வருகின்றார்கள். பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை பார்த்து பின்பற்றிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிகல்வித்துறையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாணவ செல்வங்களின் கல்வி இடைநிற்றலை தவிர்த்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும் தொடர்ந்து கல்வி பயின்று வேலைவாய்ப்புகளை பெற்று சமுதாயத்தில் உயர்நிலையை அடையும் வகையில் கல்விக்கு அதிகளவில் முக்கியத்தும் அளித்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாணவ செல்வங்களை விளையாட்டுகளில் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றார்கள். விளையாட்டு போட்டிகளில் தோல்வியடையும் போது யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நாம் ஒரு அனுபவமாக எடுத்து கொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் தெரிவித்தார்கள். தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் லீக் போட்டியில் முதலிடம் பிடித்த ஆசிரியர்கள் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள். முன்னதாக நம் பள்ளி நம் பெருமை 234/77 ஆய்வு திட்டத்தின் கீழ், 187-வது ஆய்வாக நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் . கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் தனராசு, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) (பொ) ரவி செல்வம், தாளாளர் கணபதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.

Similar News