வம்பனில் சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம்
வம்பனில் சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம்
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வம்பன் தனியார் மண்டபத்தில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் மாவட்ட அளவிலான சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்திற்கு, மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்தரங்கை தொடங்கி வைத்து விளக்கக் கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, மாநிலத் தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் அரசு மானியத்தில் தென்னை சாகுபடி செய்வதற்கான கன்றுகளும், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து தளைகளும், தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் ரூ.20 ஆயிரம் அரசு மானியத்தில் மிளகு சாகுபடி செய்வதற்கான பயிர்களும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின்கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கு மானியத்துடன் கூடிய பெட்டகங்களையும் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கருத்தரங்கில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், மிளகு சாகுபடி பரப்பினை அதிகரித்தல் மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் மூலம் மகசூல் அதிகரித்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப கருத்துக்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், வம்பன் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை இணை பேராசிரியர் முனைவர் தமிழ்ச்செல்வன் மிளகு சாகுபடியில் உயர் தொழில்நுட்ப மேலாண்மை குறித்தும், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் பூச்சியியல் உதவி பேராசிரியர் முனைவர் ராஜா ரமேஷ் மிளகு பயிரில் பூச்சி மேலாண்மை குறித்தும், உதவி பேராசிரியர் முனைவர் ராம்ஜெகதீஸ் மிளகு பயிரில் நோய் மேலாண்மை குறித்தும் பேசினர். இதில், தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் யுவராஜா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குநர் ஜெகதீஸ்வரி, புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் குமார் உதயக்குமார், ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.