விருத்தாசலத்தில் கஞ்சா வியாபாரிகள் வீட்டில் அதிரடி சோதனை
திருந்தி வாழும் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அமைக்க நடவடிக்கை
விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 96 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கஞ்சா வியாபாரிகள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் இதுவரை மூன்று பேர் இறந்து விட்டனர். மீதி உள்ள 93 குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளை கண்காணிக்கும் பொருட்டும், அவர்களின் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டும் நேற்று தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரிகளின் வீடுகளுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை இட்டனர். விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள கஞ்சா வியாபாரி அக்பர் வீடு உள்ளிட்ட கஞ்சா வியாபாரிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது.விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகிய இருவரின் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 2011 - 2024 வரை பதிவு செய்யப்பட்டுள்ள 96 வழக்குகளின் குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும் அவர்களின் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா என கண்டறிந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பழைய வழக்குகளின் குற்றவாளிகள் திருந்தி வாழ்ந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அமைப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தெரிவித்தார்.