பதப்படுத்த கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

பனை விதைகளை சேகரித்து பதப்படுத்த குமாரபாளையத்தில் கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2024-09-25 13:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பனை விதைகளை சேகரித்து பதப்படுத்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: பனை மரத்தின் பயன்கள் யாரும் அறியாதது அல்ல. நான் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேலான பனை மரங்கள் நட்டுள்ளேன்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி ஒரு கோடி பனை விதை நடும் பணி நடந்தது. இது தொடர்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொருவர் வசமும் எவ்வளவு பனை விதைகள் தர முடியும் என கேட்டு பட்டியலிட்டனர். பனை மரம் வளர்ப்பு குறித்து மாவட்ட கலெக்டர் எடுக்கும் நடவடிக்கையில் எனது பங்களிப்பாக இரண்டாயிரம் பனை விதைகள் தருவதாக கூறி, நண்பர்கள் உதவியுடன் 5 ஆயிரம் பனை விதைகள் சேகரித்தேன். இப்படி சேகரிக்கும் பனை விதைகள் நடப்பட்டன. இது போல் பல பேர் பல ஆயிரம் பனை விதைகள் சேகரித்தனர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பனை விதைகள் விழ தொடங்கும். இப்படிப்பட்ட பனை விதைகளை சேகரித்து, பதப்படுத்தி, முளைப்பு விட்ட பின், அவைகளை பாதுகாப்பாக வைத்து, தேவைப்படுவோருக்கு வழங்க, கிடங்கு அமைக்க வேண்டும். இதனால் பனை விதைகள் வீணாகாமல் இருக்கும். அடுத்தடுத்து பனை விதைகளை நட்டு, பனை மரங்கள் வளர்க்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News