விருத்தாசலத்தில் வேளாண்துறை அனுமதி பெறாமல் இயங்கிய உர மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தடை

வேளாண் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Update: 2024-09-26 17:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட உரத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் போலி உரம் தயாரிக்கப்படுவதாகவும், இதனால் தரமற்ற உரங்களை வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள் மகசூல் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குறைக் கேட்பு கூட்டங்களில் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போலி உரம் தயாரித்ததாக கூறி சில நாட்களுக்கு முன்பு புவனகிரியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் பகுதியில் இயங்கி வரும் உர மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேளாண்மை துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருத்தாசலம் பெரியவLவாடி பகுதியில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலைக்கு சென்று விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் வேளாண் அலுவலர் சுகன்யா மற்றும் வேளாண் அதிகாரிகள் கொண்ட குழுவினர் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உரம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் பணி நடந்து வந்தது. அப்போது அதன் உரிமையாளர் வைத்திருந்த ஆவணங்களை பரிசோதனை செய்தபோது வேளாண் துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து உற்பத்திக்கு தடை விதித்ததுடன் விற்பனை நிறுவனங்களுக்கும் அனுப்புவதற்கும் தடை செய்து அதற்கான உத்தரவு நகலில் தொழிற்சாலை உரிமையாளரிடம் கையெழுத்து பெற்றனர். இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் கூறும் போது தரமற்ற உரம் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மூலப் பொருட்களுக்கு வேளாண் துறையிடம் அனுமதி பெறவில்லை. இதனால் உற்பத்திக்கும் விற்பனை நிறுவனங்களுக்கு அனுப்பவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற தொழிற்சாலைகளும் இதுபோல அனுமதி பெறாமல் இயங்குகிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News