சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புடவை வைத்து பூஜை.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய  சுவாமி கோவில்  ஆண்டவர் உத்தரவு பெட்டியில் புடவை வைத்து நேற்று முதல் பூஜை செய்யப்பட்டு வருகிறது. மேலும் புடவையானது பெண்களுக்கு பிடித்த உடைகளில் முதன்மை பெற்றதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Update: 2024-09-27 02:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் சிவவாக்கிய சித்தர் அருள் பெற்ற தளமாகவும், விநாயகப் பெருமான் முருகப்பெருமானை வணங்கும் தளமாகவும் விளங்குகிறது. நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்கு உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்ரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை  குறிப்பிட்டு கூறி அதை கோவில் முன் உள்ள  மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி (பேழைக்குள்) பெட்டியில் வைக்க   உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சாமியிடம் பூ கேட்பார்கள். பூ கொடுத்தால்  பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தர்களின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் இந்த பொருளே  வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது நவீன வாகனங்களின் பெருக்கத்தினால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது. துப்பாக்கித் தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. மண் வைத்து பூஜிக்கப்பட்ட போது ரியல் எஸ்டேட் தொழில் அசுர வளர்ச்சி அடைந்து நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்ட போது சுனாமி ஏற்பட்டு வெள்ளத்தால் ஏராளமானோர் மடிந்ததாகவும் பக்தர்கள்கூறுகின்றனர் . இந்த நிலையில் கடந்த முறை ஆகஸ்ட் மாதம் 17ம்  தேதி முதல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உஞ்சபாளையத்தை சேர்ந்த கணபதி (51) என்பவர் கனவில் உத்தரவு பொருளாக இரண்டு இளநீர் வைத்து பூஜை செய்யப்பட்டது.  தென்னை விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து விலை குறைந்து  தேங்காய், தேங்காய் பருப்புகள் விற்பனை நடைபெற்று நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது. இரண்டு இளநீர் வைத்து பூஜை செய்து இன்றுடன் 41 நாட்கள் நிறைவடைகிறது.  இளநீர் வைத்து பூஜை செய்த இந்த 41 நாட்களில்  கடந்த மாதத்தில் தேங்காய் பருப்பு,கொப்பரை கிலோ ரூ.95  விற்பனை செய்யப்பட்டது. அதே போல் தேங்காய் ஒரு காய் ரூ.12 முதல் விற்பனை செய்யப்பட்டது.இளநீர் ரூ.20 முதல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த வாரம் முதல் தேங்காய் பருப்பு,கொப்பரை ஆகியவை கிலோ ரூ.140 முதலும் ,தேங்காய் ஒரு காய் ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், இளநீர் ரூ.40  வரை விற்பனை ஆகியது தற்போது இளநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதனால்  விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகளும் லாபம் அடைந்து உள்ளனர்.  இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம், வீராணம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவர் கனவில் ஆண்டவன் உத்தரவிட்ட புடவை வைத்து பூஜை செய்யப்படுகிறது. மேலும் புடவையானது பெண்களுக்கான உடைகளில் முதன்மை பெற்றதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், கரூர் மாவட்டங்கள் நூல் உற்பத்தியை மூலதனமாக கொண்டு பனியன் பவர்லூம்  போன்ற உள்ளாடைகள், தறி மூலமாக தயாரிக்கப்படும் புடவைகள், போர்வை, ஜமுக்காளங்கள் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நூல்களின் விலை உயர்வு மற்றும் தேவைகளுக்கு ஏற்றாற்போல் கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வருகின்றது தற்போது புடவை வைத்து பூஜை செய்வது புடவை பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. நூல் விலை குறைந்து புடவைகள் உற்பத்தி அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News